முன்னுரை
முனிவர்கள் உலக இன்பங்களைத் துறந்து, பற்றற்று இருப்பர்.. ஐம்புலன்களை அடக்கி காடுகளில் தங்கி தவம் செய்பவர். சடைமுடி வைத்திருப்பர். காவி உடை அணிந்திருப்பர். கையில் கமண்டலம் வைத்திருப்பர்.வேள்விகள் புரிவர். தாம் செய்த தவத்தில், ஆற்றல் பல பெற்றனர். அவர்கள் சொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு. கோபத்தினால் சாபமிட்டால் அது பலிக்கும் என்றாலும், தவத்தின் பலன் குறைந்துவிடும் என்பதால், பிறர் செய்யும் துன்பங்களையும் பொறுத்துக் கொள்வர். இருப்பினும் சில முனிவர்கள், சில நேரங்களில் சாபமிடுவர்.கம்பராமாயணத்தில் முனிவர்களின் சாபச் சொல் பலிக்கும் என்பது குறித்து ஆராய்வோம்.
தவம் செய்யும் முனிவர்கள்
முக்காலுடன் தவம் செய்பவர். தாமரை மணியாலான ஜெப மாலையையும், ஆமை வடிவமான மணையையும் வைத்திருப்பர். தவசியர் ஆமை வடிவில் உள்ள மணைப்பலகையில் அமர்ந்து தவமிருப்பர். ஆமை துன்பம் நேரும் போது, நான்கு கால்களும், தலையும் ஆகிய ஐந்து உறுப்புகளையும், முதுகு ஓட்டின் கீழே அடக்கிக் கொள்ளும். அது போல் ஐம்புலன்களின் பிணிப்பையும் அகற்ற வேண்டும். ஆமை போல் ஐந்து பற்றையும் தவசியர் அகற்ற வேண்டும் என்பதை நினைவு செய்யும் வகையில், ஆமை போல் செய்யப்பட்ட மணையில் அமர்ந்திருப்பர். தவசியர் புலித்தோலிலும் அமர்வது உண்டு. அப்புலித் தோலும் ஆமை வடிவினதாகக் கிழித்து அமைக்கப் பெற்றிருக்கும். உண்மையாக ஐம்புலப் பற்றை அகற்றி இருப்பர்.
தவசியர் குறித்துத் தொல்காப்பியர்
தவசியருக்கு பூணூல், கமண்டலம், முக்கோல், ஆமை வடிவினாலான பலகை ஆகியவை உரியன என்று தொல்காப்பியர் கூறுகிறார்.
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க்குரிய”
(தொல்காப்பியம்-மரபியல்நூ70)
தவம் செய்வோர் சொல்லுக்கு மாபெரும் வலிமை உள்ளது. அச் சொல் காலத்தை வென்று நிற்கிறது. அவர்கள் என்ன சொன்னாலும் அது அப்படியே பலிக்கிறது. துறவியர் சொன்ன சொல் தான் மந்திரமாகும். அவர்கள் செய்த தவத்தின் சக்தி, அவர்கள் சொல்லும் சொல்லில் ஊடுருவி, அச்சொல்லையே மந்திரமாக்குகிறது.
தொல்காப்பியம்
மந்திரம் குறித்து தொல்காப்பியர்,
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”
(தொல்காப்பியம்-செய்யுளியல்-நூ1434)
நிறைந்த மொழியை உடைய மாந்தர் தனது ஆணையால் சொல்லப்பெற்ற மறை சொல்லுக்கு ’மந்திரம்’ என்று பெயர். நிறைமொழி என்றால் சொல்லின் ஆற்றல் முழுமையாக வலிமையுடன் எந்த இடத்திலும் சொல்லும் வகையில் அமைந்திருத்தல் என்பது பொருள். தவம் செய்யும் முனிவர்கள் அவ்வளவு எளிதில் கோபம் கொள்ளமாட்டார்கள். ஆனால் கோபம் வந்து விட்டால், அதை யாராலும் தடுக்க இயலாது.
சாபம்
சாபம் என்பது சினத்தின், ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகும். சாபம் என்ற சொல்லுக்கு திவ்ய பிரபந்த அகராதி குட்டி, சவிக்கை, வில் என்ற பொருள்களையே எடுத்துரைக்கின்றது. மேலும் தவத்தோர், சபித்துக் கூறும் கேடுமொழி, கேடுசூல் மொழி, பழித்தல், வசை பாடுதல், கடுஞ்சொல், திட்டுதல் போன்ற பல பொருள்களையும் சுட்டுகிறது.
சாபம் என்ற சொல்லின் பொருள்
சங்க இலக்கியத்தில் ’சாபம்’ என்ற சொல், ’சபித்தல்’ என்ற பொருளில் ஆளப்படவில்லை. முதன் முதலில் சிலப்பதிகாரத்தில் தான், ’சாபம்’ என்ற சொல் ’சபித்தல்’ என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. தவத்தோர் தம் வாய்மையினால், தவ வலிமையினால் இடும் சாபமானது பலிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.
சாபம் தோன்ற காரணங்கள்
தவதோர் தாம் கொண்ட கொள்கைக்கு இடையூறு ஏற்படின், சபித்தலில் ஈடுபடுகின்றனர். வெகுளி, அழுகை என்ற இரு மெய்ப்பாடுகளே ’சாபம்’ தோன்ற காரணங்களாக அமைகின்றன. வெகுளி
“உறுபறை குடிகொள் அலைகொலை என்ற
வெறுப்ப வந்த வெகுளி நான்கே ”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் நூ1204)
என்று வெகுளிக்கான காரணங்களைத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ, பிறிதொருவருக்குப் பிழை அல்லது பாதிப்பினை ஏற்படுத்தும் செயலைச் செய்யும் போது, பாதிக்கப்பட்டவர் அச்செயலைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், சினம் தோன்றுகிறது. சினத்தின் வெளிப்பாட்டை கடுஞ்சொல் வெளிப்படுத்த, சாபம் ஏற்படுகிறது. சாபமிடும் ஆற்றல் படைத்தோரை ’சாபசருத்தி’ என்று சாத்தனார் குறிப்பிடுவார்.
முனிவர்கள் கோபத்தை அடக்கியவர்கள்
தீய அரக்கரை, அம்முனிவர்கள் தாமே அழிக்காது இருந்தமைக்கு காரணம் வேண்டின் தவம் பூண்டுள்ளர். வெகுளியை முதலில் நீக்கினர். தம்மை வந்து வேண்டியவருக்கு அவர்கள் வேண்டியவற்றை அளிப்பதற்குரிய ஆற்றலைத் தருகின்ற மெய்யான தவத்தை மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஆயினும் பொறுமையின் வன்மையால் மூண்டு எழும் கோபத்தை வேரோடு நீக்கியவர்கள். அதனின் வனத்தின் கண் வசித்த அரக்கர்களால் வருத்தப்பட்டனர். யாருக்கு எது வேண்டினும் அதனை அனுகிரகம் செய்யக்கூடியவராய் இருந்தாரே என்று தம்மை அழித்த அரக்கர்களையும் காய்ந்தழிக்கும் வல்லமை தமக்கு இருந்தது என்பதையும் இவர் தெரிந்தவர்.
முனிவர்கள் அருள் ஒன்றையே ஆற்றலாகக் கொண்டவர்கள். மற்று
“குணம் என்னும் குன்றேறிநின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது ”
(நீத்தார் பெருமை-29)
என்ற குறளுக்கு பரிமேலழகர் வகுத்த உரையையும் ஏற்க மறுத்தார் போல் இம்முனிவர் மூண்டெழு வெகுளியை முதலில் நீக்கியவர்களாய் நின்றனர்.
முனிவர்கள் உள்ளம்
முனிவர்கள் உள்ளம் தெளிவானது. கார்காலத்தின் இயல்பைப் பற்றிக் கூறும்போது, நீர்நிலைகளில் உள்ள நீர் முனிவர் உள்ளம் போல் தெளிந்திருந்தது. அந் நீர் நிலைகளில் பிறழும் மீன்கள், மகளிர் கண்களைப் போல தோன்றின.
“வஞ்சனைத் தீவினை மறந்த மாதவர்
நெஞ்செனத் தெளிந்த நீர் நிரத்து தோன்றுவ ”
(கார்காலப்படலம் 552)
நல்லொழுக்கமே சிறந்த தவம்
நிலவெம்மையைச் சீதை தாங்காள் என்று இராமன் எண்ண,அப்பாலை நிலம் சோலை நிலமாக மாறியது. சித்திரக்கூடத்திற்குச் செல்லும் வழியில் பாலை நிலம் தென்பட்டது. சீதையின் மெல்லடி இவ்வெம்மையைத் தாங்காதெண்ணிய இராமன் நினைத்த அளவில் அது சோலை நிலமாக மாறி, பருவமல்லாத காலத்திலும் மரங்களில் பழங்கள் பழுத்தற. விதைஇல்லாமல் செடி, கொடிகள் முளைத்தன. கொம்புகள் மகளிர் போல தழைத்தன. ஆகையினால் நல்லொழுக்கத்தினும் சிறந்த தவம் உண்டோ?
சித்திரக்கூட மலைப்பாம்புகளின் தோற்றம்
சீதையிடம், பெரிய யானைகளையும் எடுத்து விழுங்கும் மலைப் பாம்புகள் தம்முடைய கொடுமையெல்லாம் அடங்கி முனிவர்கள் தம்மேல் ஏறி மலைக்குச் செல்ல படி அமைத்தது போல, சுருண்டு படுத்திருப்பதைப் பார் என்றான். இதுவே தவத்தின் பயனாகும்..
துறவை ஏன் மேற்கொள்ள வேண்டும்
தசரதன் தன் உள்ளக் கருத்தை வெளியிடல் யாவரும் நாம் ஒருநாள் இறந்துவிடவே நேரும் என்பதை நினைக்க வேண்டும். அதை மறப்பார்களேயானால், அதைவிட கொடிய கெடுதி இல்லை. ஆகையினால், இனி பிறவாமைக்கு வழி தேட வேண்டுமேயானால், துறவை மேற்கொள்ள வேண்டும். பிறவி பெருங்கடலை நீந்துவதற்குத் துறவென்னும் தெப்பத்தை விட, வேறு வழியே இல்லை.
மகளிர் தம் கற்பின் மேன்மையால் தமது இல்வாழ்க்கையைச் செம்மையுற நடத்துதல் போல, தர்ம தேவதையின் உதவியினால் இப்பூமி இத்தகைய மேன்மையடையும்படி நெடு நாட்களாக உலகத்து உயிர்களுக்கு நன்மை செய்வதிலேயேக் காலத்தைக் கழித்தேன். இனி என் உயிருக்கு நன்மை தேடுதலாகிய தவம் செய்தலை எண்ணுகிறேன் என்று தசரதன் கூறினார்.
மன்னிக்கும் இயல்புடையவர்கள்
கும்பகர்ணன் முனிவர்களை வதைத்து வந்தான். அவர்கள் செய்யும் வேள்விகளையும் அழித்து வந்தான். இருப்பினும் வீடணன், கும்பகர்ணனை இராமனிடம் சரணடைய கூறும்போது, முனிவர்கள் கருணை கொண்டு உன்னை ஆதரிப்பர் என்கிறான். இதிலிருந்து முனிவர்கள் மன்னிக்கும் இயல்புடையவர்கள் என்பதை அறியமுடிகிறது.
தாண்டகவனத்து முனிவர்களின் நிலை
அங்குள்ள முனிவர்கள் பிறர் வேண்டியவற்றை தரவல்ல தவ வலிமை உடையவர்கள் என்ற போதிலும், அரக்கர் தங்களை துன்புறுத்தும் போது தங்கள் பொறுமையினால் அவர்களைக் கோபிக்காமல் விட்டவர்கள். அதனால் அங்கே உள்ள அரக்கர்களால் துன்பப்பட்டார்கள் வேண்டின வேண்டினருக்கு அளிக்கும்
மெய் தவம், பூண்டுலர். ஆயினும் பொறையின் ஆற்றலால் மூண்டெழு வெகுளியை முறையின் நீக்கினார். ஆண்டுறை அரக்கரால் அலை கொண்டார் அரோ
முனிவர் இராமனிடம் முறையிடல்
ஐயனே இந்தப் பக்கங்களில் அறத்தின் நீங்கிய அரக்கர் என்று சிலர் இருக்கின்றனர். அவர்கள் இரக்கமற்ற நெஞ்சினர். அவர்கள் துன்புறுத்தலினால் நாங்கள் ஒழுகும் ஒழுக்க நெறி தவிர்த்து. தவம் செய்தல் ஆகிய கடமையிலிருந்து நீங்கி உள்ளோம். அரசாணைச் சக்கரத்தினால் உலகைக் காத்த தசரதனின் புதல்வனே, நீங்காத இருட்டில் கிடந்த எங்களுக்கு, நீ ஒரு சூரியனாகத் தோன்றினாய், நாங்கள் உன் அபயம் என்றனர்.
முனிவர் துயர்க் கேட்ட இராமன் கூறுதல்
அரசன் இறந்தான். தாய் துன்புறுத்துகிறாள். என் தம்பி வருந்துகிறான் என் நகரமாந்தர் கொடிய துன்பத்தில் ஆளுகின்றனர். இவ்வாறு நிகழவும் நான் காட்டுக்கு வந்தேன். அப்படி வந்தது உங்களைக் காத்தளிக்கும் உதவி என்றால், அது நான் செய்த புண்ணியம் என்று இராமன் கூறினான்.
சாபம் குறித்து பொதுமக்கள்
மூக்கறுபட்ட சூர்ப்பணகை இலங்கை சென்று இராவணனைக் கண்டபோது, அவளைக் கண்ட ஊர்மக்கள் அவளுக்கு யார் இதைச் செய்தவர்கள் என்பது குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவற்றுள் ஒன்று தண்டகாரண்யத்து முனிவர்களாக இருக்குமோ? இருக்கலாம். இவள் அவர்களுடைய வேள்வி, தவம் இவற்றைக் கெடுத்துத் துன்புறுத்தி இருப்பாள். அதனால் பொறுமை இழந்து செய்திருக்கலாம் என்றே பேசிக்கொண்டனர். (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 585)
கம்பராமாயணத்தில் சாபம் பெற்றவர்கள்
இராவணனுக்கு வேதவதி, நந்திதேவர், பிரம்மன் ஆகியோர் கொடுத்த சாபம்,அகலிகைக்கு கௌதம முனிவரும், விராதனுக்கு குபேரனும்,கவந்தனுக்கு ஸ்தூலசிரஸ் முனிவரும், தாடகைக்கு அகத்திய முனிவரும், வாலிக்கு மதங்க முனிவரும், இந்திரனுக்கு துர்வாசமுனிவரும், சுயம்பிரபைக்கு இந்திரனும், இலங்காதேவிக்கு பிரம்மனும், தசரதனுக்கு சலபோசனமுனிவர் கொடுத்த சாபமும் கோபத்தினால் வந்த சாபங்களே ஆகும்.
முனிவர்களின் சாபம்
அதிகாயன் வதைப்படலத்தில் சாபம் கொடுக்கும் முனிவர்களின் கோப சொற்களைப் போன்றன வாய் தவறாமல் செயல்பட்ட தம் இலக்குகளை அறுக்கும் அம்புகள் தலைகளைக் கவர்ந்து கொள்ள, அதன் பின்பும் தேர் வீரர்களின் தலையற்ற முண்டங்கள் ஆகிய கவர்ந்த கூட்டங்கள் கையினால் விளைக்கப்படுகின்ற கட்டமைந்த வில்லிலிருந்து முன்பு பெற்றிருந்த வேகத்தை விடாமல் அம்புகளைச் செலுத்தின. இவ்வாறு செலுத்தும் கவந்தங்கள் மிகப் பலவாகும்.
“வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலை கொளக் குறைத்தலைக் குழாம் ”
(அதிகாயன் வதைப்படலம் 1783)
படைத்தலைவர் வதைப்படலத்தில், மாபெரும்பக்கன் தன் வில்லை அப்பால் வீசிவிட்டு, சூரியனைப் போல் ஒளிவிட்டு இப்போது தரையில் வீசப்பட்டு சிதையும் தேரிலே இருந்து இறங்கி, சான்றோரின் சாபச்சொல்லைப் போல தவறாது அழிக்கவல்ல ஒரு சூலத்தை, அந்த அங்கதனது மற்போரால் உறுதி பெற்று திகழும் மார்பின் மீது எறிந்தான்.
“எல்லின் பொலி தேரிடை நின்று இழியா
சொல்லின் பிழையாதது ஓர் குலம் அவன்”
(படைத்தலைவர் வதைப் படலம் 2319)
இந்திரஜித் வதைப் படலத்தில், இந்திரஜித் வில்லால் இலட்சுமணனை வெல்லுதல் அரிது என நினைத்து, வெயிலை விடக் கொடிய அனலைக் கக்கும் வேலாயுதத்தை விரைவில் செல்வாயாக எனச் சொல்லி, வலிமையோடு செலுத்தினான். அந்த வேல் நான்முகனின் மகனான புலத்தியன் கொடுத்ததால் சூரியனை விட, ஒளி உண்டாகத் தன்னை நோக்கி வருவதை இலட்சுமணன் பார்த்து, ஏழு சிறந்த முனிவர்களின் சாபச் சொல்லை விட, வல்லமை பெற்றதான ஒரு சுடும் அம்பினை இந்திரஜித் வில்லின் இடையில் அது இரண்டு துண்டுகளாகும் படி செலுத்தினான்.
“எல்லினும் வெளி பட எதிர்வது கண்டு
இளையவன் எழு வகை முனிவர்கள்தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால்
நடுஇரு துணிபட உரறினால்”
(இந்திரஜித் வதைப் படலம் 3081)
இராவணன் வதைப்படலத்தில், இவ்வுலகினை படைத்தவனான இராமன் தேவருடைய திண்மையான படைகள் அனைத்தையும் மேன்மேலும் விடாது தொடுத்தான். அப்படைகள் உண்மையைக் கண்ட பொய்யைப் போலவும், தீயின் முன் பஞ்சு போலவும், சூலத்தை ஒன்றும் செய்ய முடியாது சிதறிப் போகும் இராமன் முனிவர்கள் தரும் சாபத்தை போலவும், வேறு உவமை இல்லாததுமான அந்தச் சூலத்தைக் கண்டு ஒன்றும் செய்ய முடியாது நின்றான்.
“பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான்
வய்யும் சாபம் ஒப்பு என வெப்பின்வலி கண்டான் ”
(இராவணன் வதைப் படலம் 3771)
மாரீசன் வதைப்படலத்தில், இராவணனிடம் நீ திட்டமிட்டபடி செய்ய முயன்றாலும் பாவமும், பழியும் அல்லாமல் நன்மையும், இன்பமும் உண்டாகா உன் செயல் கை கூடினாலும் எல்லா உலகங்களையும் படைத்தவனான இராமன் சான்றோர்களின் சாபம் போலத் தப்பாமல் தாக்கும் அம்புகளைக் கொண்டு உன் சந்ததியுடன் உனது வலிமையை அழித்து, உனது கூட்டத்தையும் முழுவதையும் நிச்சயமாய் அறுத்து அழித்து விடுவார் என்றான்.
“வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும்
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம்”
(மாரீசன் வதைப் படலம் 734)
வர்ணனை வழி வேண்டுபடலத்தில், இராமன் அவுணரை அழித்தல் குறித்து கூறும்போது,இராமனின் அம்பு பல நீண்ட காவத தூரம் விரைவாகப் போய் புகை மிகுமாறு தீ தோன்ற பாவச் செயல்களைச் செய்தவரை சுட்டதன்றோ. அந்த அம்பு எதைப் போன்றது என்றால், விளக்கைப் போல விளங்குகின்ற தத்துவ அறிவுடன் கூடிய மறைகளில் வல்ல முனிவர்கள் சபிக்கும் சாபத்தைப் போன்றதாகும்.
“தீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செய்யும்
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா ”
(வர்ணனை வழி வேண்டு படலம் 610)
ஒற்றுக் கேள்வி படலத்தில், சாபச்சொல்லைப் போல தவறாது கொல்லும் வெள்ளை கை கொண்ட மானிடர் கடலை, விரைவில் அடைத்து அணையைக் கட்டி படையுடன் கடலைக் கடந்து நம் ஊரைச் சார்ந்தார் என்ற போதே வேறு செய்ததற்குரிய செயல் யாது இருக்கின்றது என்று இராவணன் வினவினான்.
“வைதெனக் கொல்லும் விற்கை மானிடம் மகர நீரை
நொய்தின் அடைத்து மானத் தானைய்யான் நுவன்ற நம்மூர் ”
(ஒற்றுக் கேள்விப் படலம் 753)
அந்த நகரின் தரையும் பொன்னாக இருந்ததால் அதுவும் வெந்து உருகி ஓடிவிட்டது.
இலங்கை எரியூட்டு படலத்தில், சாப மொழியைப் போல விரைவாக உலகை உண்கின்ற நெருப்பு, அது மலைபோலும் நிமிர்ந்து நின்ற மணிகள் பதித்த மாளிகைகளும், வரிசையாக நிற்கும் சோலைகளும், அந்த நெருப்பால் எரிக்கப்பட்ட பின்பு நீக்குமோ கருகி சரிந்து விட்டன.
” உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை ”
(இலங்கை எரியூட்டு படலம் 1194)
முனிவர்கள் தங்கள் தவங்களைப் பிறருக்கு அளித்தல்
முனிவர்களின் சாபச்சொல் பலிக்கும் என்பது மட்டுமல்ல அவர்களின் அன்பான சொல்லும் பலிக்கும்.
முனிவர்கள் முடிசூட இருக்கும் இராமனுக்கு நீண்ட ஆயுளோடு நீ வாழவேண்டும் என்பதால், எங்களுடைய மீதமுள்ள வாழ்நாட்களையெல்லாம் உனக்காக எடுத்துக்கொள். அது மட்டுமல்ல, நாங்கள் இந்திரியங்களை அடக்கி இதுநாள்வரை செய்த தவப்பயனை எல்லாம் நீ ஏற்றுக்கொள். உலகில் உள்ள எல்லா நலன்களும் உனக்கு வந்து சேரட்டும் என்று கூறி வாழ்த்தினர்.
” உய்ந்தது இம் உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார்
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார்
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார்
பைந் துழாய்த் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் ”
(கைகேயி சூழ்வினைப்படலம்269)
சுதீக்கணமுனிவர்
அகத்தியரைக் காணச் செல்லும் வழியில் சுதீக்கண முனிவரை இராம, லட்சுமணர்கள் கண்டனர்.பிரம்மனது மரபிலே பிறந்தவர்களில் முதன்மையான முனிவர் சிறந்த தவத்தை முடித்தவர்.இவர் தான் செய்த தவங்களை எல்லாம் இராமனுக்கு அளித்தார்.
“உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான்
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை
தவம் எலாம் கொளத்தக்கனையால் என்றார் ”
(அகத்தியப்படலம் 146)
பரசுராமர், இராமனிடம் நீ தொடுத்த அம்பு பழுதாகா வண்ணம் நான் இதுவரை செய்த தவங்களை எல்லாம் இலக்காக தருகிறேன், கொள்வீராக என்று சொல்லவே, இராமபாணம் அவனது தவங்களை எல்லாம் வாரிக் கொண்டு இராமனிடத்தில் வந்தது. (பரசுராமப்படலம்1247)
தவம் செய்தால் இருவினைகளும் நீங்கும்
சரபங்க முனிவர், இராமனிடம் ஆயிரக்கணக்கான தவம் புரிந்துள்ளேன். நீ இங்கே வருவாய் என்ற எண்ணம் உண்டு. என் இரு வினைகளும் தீர்ந்தன. இனி எனக்கு எந்த ஒரு வினையும் இல்லை என்று கூறுகிறார். (சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 111)
ஆயிரம் விதமான தவங்கள்
தவங்கள் பலவகையான அவற்றுள் சில. நீருக்குள் இருத்தல், நெருப்பிடையே வேகாத இருத்தல், ஒற்றைக் காலில் நிற்றல், காட்டில் திரிந்திருத்தல், காற்றை மட்டும் புசித்தல், தாமரை இலையும் தண்ணீரும் போலவும், புளியம்பழமும் மேலோடும் போலவும் உலகோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் முதலியவையாய் தவங்கள் இருக்கும். இராமனது வருகையால் நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளும் போயின என்கிறார். தாண்டக வனத்தில் பாலகில்லர், முண்டர், மோனர் முதலிய தவ முனிவர்கள் இராமனை அன்புடன் வரவேற்றனர்.
சாபநிவிர்த்தி
சில முனிவர்கள் அளித்த சாபங்களுக்குச் சாப விமோசனம் உண்டு அதையும் அவர்களே கூறினர். கௌதம முனிவர், அகலிகைக்குக் கல்லாகும் படி சபித்தபோது, அவள் தன் தவறை உணர்ந்து, மன்னிப்பு வேண்டியபோது இராமனின் பாதத்துளி எப்போது உன் மீது படுமோ, அப்போது சாப நிவர்த்தி ஆகும் என்கிறார். சலபோசன முனிவர், தசரதனுக்கு சாபம் அளித்தார் நாங்கள் எப்படி எங்கள் மகன் உயிர்ப் பிரிய வருந்தி இறத்தலைப் போன்று, நீயும் உன் மகன் பிரிந்து இறப்பாயாக என்ற சாபமிட்டனர். சாபநிவர்த்தி அளிக்கவில்லை. வாலிக்கு, மதங்க முனிவர் தன் மேலும், ஆசிரமத்திலும் இரத்தத்துளி பட்டதால், அவர் கோபமடைந்து, இதைச் செய்தவன் என் ஆசிரமம் இருக்கும் பகுதிக்கு வந்தால், தலை வெடித்து இறப்பான் என்று சாபமிட்டார். அதனால் வாலி, ரிஷயபுங்கம் மலைப்பகுதிக்குச் செல்லவே இல்லை. துர்வாசக முனிவர், இந்திரனுக்கு செல்வம் அழிந்து போக என்று சாபமிட்டார். சுயம்பிரபைக்கு சாபம் அளித்தபோது சீதையைத் தேடி வானர வீரர்கள் வரும்போது சாபம் நீங்கும் என்றார். ஸ்தூலசிரஸ், கவர்ந்தனுக்கு சாபம் அளித்த போது, இராமன் ஆயுதம் பட்டு சாப நிவர்த்தி கிடைக்கும் என்றார். விராதனுக்கு, குபேரன் அளித்த சாபத்தின் படி இராமனுடைய திருவடி தீண்ட பெற்றால், சாப நிவர்த்தி ஏற்படும் என்றும் கூறினான். இலங்கை மாதேவிக்கும் சாப விமோசனம் அனுமனால் கிடைத்தது.
(இராவணனுக்கு, நந்தி தேவர், பிரம்மதேவன் அளித்த சாபம், . விராடனுக்கு,குபேரன் சாபம் அளித்தான் வாலிக்கு மதங்க முனிவர் சாபம் அளித்தார். இந்திரனுக்கு, துர்வாசக முனிவரும் சுயம்பிரபைக்கு இந்திரனும் இலங்காதேவிக்கு பிரம்மனும், தசரதனுக்கு, சலபோசன முனிவரும் சாபம் அளித்தனர்).
இச்சாபங்கள் எல்லாம் ஒரு ஆண், மற்றொரு ஆணுக்கும், ஒரு ஆண் மற்றொரு பெண்ணுக்கும் சாபம் அளித்ததாகும். ஆனால் இதிலிருந்து மாறுபட்டது வேதவதி, இராவணனுக்கு அளித்த சாபம்.
வேதவதி சொன்ன சொல்
சாபமிட்ட ஆண்கள் அனைவரும் உயிரோடு இருக்க, சாபமிட்ட பெண் வேதவதி மட்டுமே, தீயில் விழுந்து தன்னுயிர்த் துறந்தாள்.
பெருமைக்குரிய முனிவரின் மகளாகப் பிறந்த போதும், இராவணன் அவளை வலிய தீண்டி, அவள் இறப்புக்கும் காரணமானான்.
இதில் வேதவதி, இராவணனுக்குக் கொடுத்த சாபம் வேறுபட்டது எனலாம். வேதவதி, திருமாலையே திருமணம் செய்து கொள்ள விரும்பி, தவம் செய்து கொண்டிருந்தபோது, இராவணன் அவளை வழிந்து தீண்டினான். அதனால் அவள், பிரம்மர் அளித்த வரத்தினால், ஆணவத்தோடு நீ என்னைத் தீண்டியதால், உன்னைக் குலத்தோடு அழிக்க, நான் மீண்டும் பிறந்து வருவேன். உன் மரணத்துக்குக் காரணமான நோயாக நானே ஆவேன் என்று சொல்லிவிட்டு தீயில் விழுந்து உயிரை விட்டு விட்டாள்.
“தீ இடைக் குளித்தவத் தெய்வக் கற்பினாள்
வாயிடை மொழிந்த சொல் மறுக்கவல்லமோ ”
(இராவணன் மந்திரப் படலம் 92)
வேதவதி சொன்ன சொல் பலித்தல்
இராவணன் இறந்தவுடன் வீடணன், ,இராவணன் மலைபோலும் நீண்ட தோளை உடையவனே, அக்காலத்து நெருப்பில் விழுந்து இறந்த வேதவதி இந்த சீதையே காண். இவள் உலகத்துக்கு ஒரு தாய் என்று கூறினேன். அந்தச் சொல்லை உன் மனதில் கொள்ளாமல் சென்று, உன் குலம் முழுவதும் கோபித்துப், போர் செய்து போரிலே இறந்திருப்பதைப் பார்த்தும், இராமனுடன் உறவு கொள்ளாமல், பயனின்றி இறந்தாயே என்று வருந்தி அழுதான்.
சீதை சொன்ன சொல்
சீதை, அனுமனிடம் பேசும்போது எல்லை நீத்த இவ்வுலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன். அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன் என்கிறாள். சொல்லினால் இந்த உலகத்தையே அழித்துவிடுவேன் என்கிறாள்.
தன்னை ஏற்றுக்கொள் என்று வேண்டிய இராவணனிடம், சீதை சினத்துடன் உன் மார்பிலே சேர்வதற்கு உரியவை தேவர்களுக்கெல்லாம் தலைவனான இராமனுடைய கையில் இருந்து வெளியேறும் அம்புகளே. இராமனின் திருப்பெயர் பொறிக்கப்பட்ட அம்புகள், உன்னை எள்ளி நகையாடி உனது மார்பைப் பிளந்து கொண்டு, அதனுள் நுழைந்து புண்கள் எல்லாம் வெளிப்படுமாறு செய்யும் என்று கூறினாள்.( மாயா சனகன் படலம் 16 29)
இராமனது உறுதியான அம்பு தள்ளுவதனால் கோர பற்களைக் கொண்ட பிளந்த வாயுடன் கூடிய, பெருத்த கழுத்திலே பொருந்திய தலைகள் சிதறி, இனிமேல் உயிர்ப் பிழைப்பதற்கு வழி இல்லாமல் இறந்தாய் என்று கூறி, துளசி மாலை அணிந்த அனுமன் வந்து, என்னை இராமனிடம் அழைத்துச் செல்லும் அந்த நாளிலே, உன் மரணத்தைப் பற்றிய அந்தச் சொல்லை நான் ஆசையோடு கேட்கப் போவதுண்டு என்று கூறினாள்.
மேலும் இப்போது ஏற்பட்டுள்ள போரில் உன் புதல்வனான இந்திரஜித் உயிரை, எம்முடைய தாயான சுமத்திரை நற்பேறு பெறுமாறு பெற்றெடுத்த சிறந்த மகனான இலட்சுமணனது அம்பு தீண்டி , உயிரிழந்த அவனது உடலை, நாய் தனது நாவினால் நக்கும் போது, என் மகன் இறந்து விட்டான் என்று நீ குரல் உயர்த்தி கதறும் கதறல்களே ஆகும் என்று சீதை சினத்தோடு செப்பினாள். (மாயாஜனகன் படலம் 16 31, 16 32)
தவத்தின் வடிவமான சீதை சொன்ன சொல் பலித்தல்
இந்திரஜித் இறந்ததால், இராவணன் தரையில் உருள்வான். துன்பத்தில் புரள்வான். மகனை இழந்த சோகத்தால் இராவணனின் 10 தலைகளும், வாய் விட்டுப் பேசி அழுதன. இராவணன், இந்திரசித்தின் தலையைக் காணாததால் மனம் நொந்து, ’அந்த மனிதன் என் மகனின் தலையை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்’ என நினைத்து, முன்பு உண்டான புண்கள் நிறைந்த மார்பினை உடையவனாய், உள்ளத்தில் பொருமி, விம்மி வானமே பிளக்கும்படி புலம்பி அழுதான். அழகாபுரி என்னும் பழமையான ஊரையும், இந்திரனுடைய நகரமான அமராவதி முதலான நகரங்களையும், தீயும் தீப்பொறிகளும் அழிக்க நான், உலகம் மூன்றிணையும் எனக்கே உரிமை பெற்றவனாய் அன்று காத்தேன். ஆனால் இன்றோ, வண்டுகள் பருகும் தேன் நிறைந்த மாலை அணிந்த தலையை இழந்த என் மகனின் உடலை நரி உண்ணக் கண்டேன். நான் உண்ணும் உணவினை விட, நாய் உண்ணும் எச்சில் உணவே மேலானது என்கிறான்.(இராவணன் சோகப் படலம்3161)
இராவணன் இறந்தபின் மண்டோதரி, இராமன் என்னும் ஒரு மனிதனுடைய அம்பு வெண்மையான எருக்க மாலை அணிந்த சடை முடியை உடைய சிவன் எழுந்திருக்கும் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் அழகிய உடம்பு முழுவதையும் எள் இருப்பதற்குரிய சிறிய இடமும் இல்லாதவாறு அவன் உயிர் இருக்கும் இடம் தேடி, கொலை செய்த தன்மையோ அல்லது தேன் இருக்கும் மலர்களை அணிந்த கூந்தலை உடைய சீதையை இதயம் என்னும் சிறையில் மறைத்து வைத்த காதல், உள்ளே எங்காவது மறைந்திருக்கும் என்று கருதி, அவன் உடலில் புகுந்து தேடியவாரோ என்று அழுதாள். (இராவணன் வதை படலம் 38 79)
இராவணன் இறந்த செய்தியை அனுமன், சீதைக்குக் கூறுகிறான். அந்த இராவணனின் தலைகள் பூமியைத் தாங்குகின்ற மலைகள் விழுந்து கிடப்பதை போலக், கீழேத் தரையில் விழுந்து கிடந்தன. மணி பதித்த அணிகளை அணிந்த அவனுடைய தோள்வரிசைகள் கடலில் பொருந்திய அலைகளைப் போலக் கீழே விழுந்து கிடந்தன. அவனது உடல் தரையில் விழுந்து அசைவில்லாமல் கிடந்தது என்று கூறினான்.
” தலை கிடந்தன தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல் மணித்தோள் எனும்
அலை கிடந்தன ஆழி கிடந்தென
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் ”
(மீட்சிப்படலம் 3910)
மீட்சிப் படலத்தில் அக்னி பகவானும், இராமனிடம் பெரும் கற்பினளான இந்தச் சீதை, உள்ளத்தில் சினம் கொண்டால் மேகம் மழையைப் பெய்யுமோ, உயிர்களை விழுங்கிட பூமி பிளந்து விடும். அதுவன்றி எல்லாப் பாரங்களையும் பொறுத்துக் கொண்டு இருக்குமோ, அறம் நன்றாக நடைபெறுமோ உலகம் நிலைத்திருக்குமோ இவள் சாபமிடுவாளானால், தாமரை மலரில் இருக்கும் நான்முகனும் இறப்பானல்லனோ என்று கூறுகிறான். (மீட்சிப் படலம் 39 87)
இலட்சுமணன் சொன்ன சொல்
பிரம்மாத்திரப் படலத்தில் இலட்சுமணன், இந்திரசித்திடம் அரக்கர் என்னும் பெயர் படைத்தவர் அனைவரும் அழிந்து ஒழிந்து சாகப் போகின்றீர்கள். அத்தகைய அரக்கர்களுக்கு இறுதிக்கடனாகிய நீர்க்கடன் செய்ய எம்மிடம் வந்த வீடணனைத்தவிர வேறு ஒருவரும் இரா. அதுபோலவே உன் தந்தைக்கு முன்பே நீ இறந்து விடுவாய். உன் பின்னே இறக்கும் அவனுக்கு இறுதிக்கடனாகிய நீர்க்கடன், உனக்குப் பதிலாக அந்த வீடணனே இரக்கமோடு செய்ய இருக்கிறான் என்று வீரவுரைக் கூறினான்.
” அரக்கர் என்பது ஓர்பெயர்படைத்
தவர்க்கெலாம், அடுத்த
புரக்கும் தன்கடன் செயவுளன்
வீடணன் போந்தான்
சுரக்கும் நுந்தைக்கு செயக்
கடவன கடன்கள்
இரக்கம் உற்று உனக்கு அவன்செயும்
என்றனன் இளையோன் ”
(பிரம்மாத்திரப்படலம் 2448)
இலட்சுமணன் சொன்ன சொல் பலித்தல்
இராவணன், இந்திரசித் இறந்த செய்தியை அறிந்தவுடன் போர்க்களத்துக்கு ஓடினான். தலையற்ற தன் மகன் உடலைக் கையிலே ஏந்தி மிகுந்த வருத்தத்துடன் பலவாறாகப் புலம்பினான்.சீதை என்னும் பெண்ணொருத்தி காரணமாக எனக்கு மகனான நீ நான் இறந்தப்பின் செய்யவேண்டியக் கடமைகளை எல்லாம் மனம் இரங்கி வருந்தி தந்தையான நான், மகனான உனக்குசெய்ய வேண்டியவனானேன். என்னைவிட இழிந்தவர் இவ்வுலகினில் எவரேனும் உள்ளனரோ என்று கூறி கதறினான். (இராவணன் சோகப்படலம்3164)
இராவணன் இறந்தவுடன் அவன் மனைவி மண்டோதரியும் இறந்துவிட்டாள்.அவர்களது உடலுக்கு வீடணனே இறுதிக்கடன் செய்தான்.(இராவணன் வதைப்படலம்3889)
தவத்தோர், முனிவர், பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோர் சாபமிடும் ஆற்றலைப் பெற்றவராக விளங்குகின்றனர். சாபம் பெற்றதற்கான காரணங்களும், பலிக்கும் விதமும், கால எல்லையும், சாபம் நிவர்த்தியாகும் நேரத்தையும் காப்பியங்கள் எடுத்துக் கூறுகின்றன.
அழுகை
“இளிவே இழவே அசைவே வறுமை என
விளிவில் கொள்கை அழுகை நான்கே ”
(தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல் நூ1199)
இழப்பு ஏற்பட்ட காரணத்தாலும் சாபம் விடுவர். இருப்பினும் கம்பராமாயணத்தில் இழப்பு ஏற்பட்டதனால் விடும் சாபம் குறித்துக் கூறப்படவில்லை.
முடிவுரை
ஐம்புலன்களையும் அடக்கி காட்டில் தவம் செய்யும் முனிவர்கள் பிறப்பு, இறப்பு என்னும் இரு வினைகளையும் கடந்து, பிறவா நிலை அடைய விரும்பியே தவம் மேற்கொள்வர்..அவர்கள் சொன்ன சொல் பலிக்கும்..அவர்கள் கோபத்தை அடக்கியவர்கள். தனக்குத் துன்பம் செய்பவர்களையும் பொறுத்துக் கொள்வர் .இருப்பினும், சில நேரங்களில், சில முனிவர்கள் சாபமிடுவர்.பின் அவர்களே மன்னித்து சாபநிவிர்த்தியும் வழங்குவர். தவத்தோர், முனிவர், பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றோர் சாபமிடும் ஆற்றலைப் பெற்றவராக விளங்குகின்றனர். சாபம் பெற்றதற்கான காரணங்களும், பலிக்கும் விதமும், கால எல்லையும், சாபம் நிவர்த்தியாகும் நேரத்தையும் காப்பியங்கள் எடுத்துக் கூறுகின்றன.
துணை நூற்பட்டியல்
1.இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.
2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம்-பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை,1953.
3. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் புதுச்சேரி, சென்னை.
4.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
5. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
6. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளி பதிப்பகம், சென்னை,2019.
7.கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.
8. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
9. முனைவர் க. மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் முனிவர்கள்:
http://www.muthukamalam.com/essay/literature/p301.html
10.முனைவர் க. மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் வரங்களும் சாபங்களும்
http://www.muthukamalam.com/essay/literature/p285.html
11.ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3, தமிழ் நிலையம், சென்னை,2007.