தமிழ் இலக்கண இலக்கியம் கற்பித்தற் பயன் சிறக்கவும் நடைப் பிழை தவிர்க்கவும் பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாவதை விளக்குவதாக இக் கட்டுரை அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கூறின் பொருளையும் சூழல் நோக்கி முறையாகப் கருத்துணர்ந்து தவறின்றிப் பயன்படுத்தவேண்டும் என்பது பொருண்மையியல் அணுகுமுறையின் அடிப்படைக் கொள்கையாகும்.

முதல் வகுப்பிலிருந்து பள்ளிகளிலும், பட்டப் படிப்பு வரை கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடம் பயிற்றுவிக்கப்படுகின்றது. அதோடு தமிழ் முதன்மைப் பாட வகுப்புகளிலும் மாணவர்கள் இலக்கணம் கற்பதோடு கட்டுரைப் பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர். நல்ல தமிழ் எழுத அறிவுறுத்தும் நூல்களும் இயற்றப்படுகின்றன. இருப்பினும், இக்காலத் தமிழில் அனைத்துப் பயன்பாட்டிலும் முனைவர் பட்ட ஆய்வேடுகள் சிலவற்றிலும் ஒற்று மற்றும் தொடர்ப் பிழைகள் நேர்கின்றன. இலக்கண விதிகளை முறையாக அறியாமையாலும், பிழை நேரக்கூடாது என்னும் எச்சரிக்கை / விழுமிய உணர்வு இன்மையானும் இத்தகைய பிழைகள் வாய்க்கின்றன. இவை மொழி வளர்ச்சியையும் புரிதிறனையும் பாதிப்பதுடன் மரபையும் குலைப்பதால் ஆசிரியர்களும் அறிஞர்களும் பிழை தவிர்ப்பை வலியுறுத்துகின்றனர். இலக்கணக் கல்வியில் பிழை ஆய்வு வளர்ந்துவரும் துறையாகும். இத்தகைய மொழி வழக்காற்றுச் சிக்கலை எதிர்கொள்ளப் பொருண்மையியல் அணுகுமுறை வாய்ப்பாவதைக் கற்பித்தலிலும் ஆய்விலும் அறிந்ததால் பட்டறிவுப் பகிர்வாகவும் வேணவாவாகவும் இக் கட்டுரை பயன்பாட்டு நோக்கில் அமைக்கப்படுகின்றது.

தமிழ்ப் பொருண்மையியல்:

தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களிலும் உரைகளிலும் ஆங்காங்கே , இலக்கணத்தின் கூறாகப் பொருண்மையியல் கொள்கைகள் சுட்டப்பட்டுள்ளன. அவற்றின் பிழிவைப் பின்வருமாறு தொகுக்கலாம்.

  1. மொழி என்னும் கருத்து வெளியீட்டுக் கருவி, எழுத்து, சொல், தொடர் ஆகிய அமைப்புகளை உடையது. இந்த அமைப்புகள் பொருண்மையாக்கத்திற்கு வாய்ப்பாகின்றன.
  2. எழுத்துத் தனித்தும் முறைப்படி இணைந்தும் சொல்லை ஆக்குவதோடு, சொற்பொருள் மாற்றத்திற்கும் அடைப்படை ஆகின்றது.
  3. எல்லாச் சொல்லும் பொருள் குறிக்கும்/ சுட்டும். மேலும் ஒவ்வொரு கருத்தாடலும் பயனாளரின் புரிதிறனை மதிக்கவேண்டும்.
  4. சொற்கள் மரபுப்படி சேர்ந்து, பொருளுள்ள தொடரை உருவாக்கும்.
  5. ஒலிமை /பொருண்மை சார்ந்த்தாகப் புணர்ச்சி இயலும்.
  6. மொழி அமைப்புகளில் மரபு உறுதியாகப் பின்பற்றப்பட்டுப் பொருள் புரிதிறன் பேணப்படவேண்டும்.
  7. மொழி அமைப்புகளைப் போன்றே, இலக்கியக் கூறுகளும் பொருள் உணர்த்தும் பண்பின.

மேற்கூறிய கொள்கைகளின் அடிப்படையில் உருவாகும் பொருண்மையியல் அணுகுமுறையில் இலக்கணக் கல்வி பயிற்றப்படின் விழைபயன் சிறக்கும். தன்விளக்கத் தன்மையுடன் அமைந்துள்ள இலக்கணக் கலைச்சொற்களை முறையாக/ முழுமையாகப் புரிந்துகொண்டால் செயல்திறன் வளர்ந்தோங்கும் என்பதால் இலக்கணம் கற்பிக்கையில் கலைச்சொற்களைத் தெளிவுறுத்தவேண்டும்

.  முதலில் பொருண்மையியல் அணுகுமுறையில் வேற்றுமையைக் கற்பித்தல் குறித்து விளக்கப்படுகின்றது.

வேற்றுமைதொடரியல் உறவு:

எழுத்துத் தனித்தும் முறையாகத் தொடர்ந்தும் பொருள் சுட்டும் சொல்லும், சொல் தனித்தும் முறைப்படி தொடர்ந்தும் பொருள் உணர்த்தும் தொடரும் ஆக்கப்படுகின்றன. தொடராக்கத்தில் எழுவாய்- பயனிலை இயைபு, அண்மையுறுப்பு அமைவு , புணர்ச்சி விதி, பொருட் பொருத்தம் முதலியன இன்றியமையாதன. தமிழ்த் தொடரியலில் பொருண்மை மதிப்புடைய வேற்றுமை அமைப்புச் சிறப்பான புலப்பாட்டுப் பணியை ஆற்றுகின்றது. இதனால் தோன்றா எழுவாய், தொகை போன்ற அமைப்புகள் உருவாகின்றன.  தோன்றா எழுவாயும் இரண்டாம் வேற்றுமைத் தொகையும் கொண்ட பயன்பாட்டு / புற வடிவுடைய’ திருக்குறள் படித்தேன் என்னும் தொடரை,   ’நான் திருக்குறளைப் படித்தேன்என்று புதை/ பொருண்மை வடிவமாகப் புரிந்துகொள்ள இயல்கின்றது. இத்தகைய வேற்றுமை இலக்கணத்தைக் கற்பிக்கும்போது, கலைச்சொல் விளக்கம், தொடரின் எழுவாய்க்கும் வினைக்குமுள்ள இணைவு போன்றவற்றை மாணவர்கள் கருத்தறிந்து செம்மையாகப் பயன்படுத்தும்  நிலையில் கற்பிக்கலாம். சான்றாக, இரண்டாம் வேற்றுமை குறித்து விளக்கும்போது,

  • வேற்றுமை உருபு பெயர்ச் சொல்லோடு மட்டும் பின்னொட்டாக ஒட்டும். – முருகன் + ஐ, ஆல், கு, இன், அது, கண்
  • எட்டு வேற்றுமையில், முதல் மற்றும் இறுதி வேற்றுமைக்கு உருபு இல்லை. இரண்டாம் வேற்றுமையின் உருபு தைப் பார்.
  • உருபு வெளிப்பட்டு விரியாகவும் தொக்கும் பயிலலாம்.

பழத்தைத் தின்றான் /  பழம் தின்றான்.

  • இரண்டாம் வேற்றுமை உருபு, தொடரின் செயப்படுபொருளொடு மட்டும் ஒட்டும்: எழுவாயோடு ஒட்டாது.

– கண்ணன் கையைப் பிடித்தான்.

  • செயப்படுபொருள் குன்றிய வினைமுற்று அமையும் தொடர்களில்

இரண்டாம் வேற்றுமை இயலாது-  நம்பி நடந்தார்.

  • தொடரில் எழுவாய்+ செயப்படுபொருள்+ பயனிலை என்னும் அமைவு இயல்பானது. இது மாறியும் அமைவதுண்டு- சீதையை அனுமன் கண்டான் எனவும் இயலலாம். இதில் நடை வேறுபாடு ஏற்படுமே அல்லாமல் பொருள் நிலையும், சொற்களின் இலக்கணக் குறிப்பும் பிறழா.
  • பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் சாரியை இயல்வதுண்டு. – கை+ ஐ= கையை, கையினை. ஆனால் மகரவொற்றில் இறும் பெயர்ச் சொல்லோடு ஒட்டும்போது உறுதியாக அத்துச் சாரியை பெறும். முகம்+ ஐ> முகம்+ அத்து +ஐ = முகத்தை, சாரியைக்குச் சொற்பொருள் இல்லை ; உணர்ச்சி வெளிப்பாடும் இலக்கணச் செயல்பாடும் உண்டு.

செயப்படுபொருள் வேற்றுமை   :

ஒரு தொடரின் தெரிநிலை வினைமுற்று உணர்த்தும் செயலுக்கு உட்படுத்தப்பட்டது,  யாரை/ எதை என்னும் வினாவிற்கு விடையாக அமைவது, அத் தொடரின் செயப்படுபொருளாகும். மேற்கூறிய, கண்ணன் கையைப் பிடித்தான் என்னும் தொடரில் கண்ணன் எதைப் பிடித்தான்?  என்னும் வினாவிற்கு விடையாக, கை(யை)  என்னும் பெயர் அமைந்து,  இந்தத் தொடரின் செயப்படுபொருளாதல் விதந்து விளக்கத்தக்கதாகும். அதனால்  இரண்டாம் வேற்றுமைக்குச்   செயப்படுபொருள் வேற்றுமை   என்றும் பெயர் ஏற்பட்டதை மாணாக்கர்க்குத் தெளிவிக்கலாம். இத்தகைய பண்புகளுடைய பின்னொட்டான ஐயை அடுத்து ஒற்று மிகும் என்று வரையறுக்கலாம். இத்தகைய தெளிவு ஏற்படின் பிழை தவிர்க்கப்படும். இவ்வாறே மற்ற வேற்றுமைகளின் இலக்கணத்தையும் கற்பிக்கலாம்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை :

தொடரின் உறுப்பாகின்ற பெயர்ச்சொல்லுடன், அதன் வண்ணம், வடிவம், மணம் முதலிய பண்பைச் சுட்டும் பண்படை இணைக்கப்படும்போது, இரண்டுக்குமிடையில்  ஆகிய என்னும் இணைப்புச் சொல் தொக்கிநிற்பது பண்புத்தொகை ஆகும். சான்றாக, வெள்ளையாகிய நிறத்தையுடைய தாமரை என்னும் தொடரை வெள்ளைத் தாமரை என்று தொகுத்து, மீண்டும் எளிமை நோக்கில், வெண்தாமரை / வெண்டாமரை  என்று புணர்க்கின்றோம். இத்தகைய தொடராக்கப் பொருண்மையில், ஓர் இனத்தின்   பொதுப் பெயரோடு அதன் வகையையும் புணர்க்கும்போது இருபெயரொட்டுப் பண்புத்தொகை உருவாகின்றது. காட்டாக, மரம் என்னும் இனப்பொதுப் பெயரோடு, மரத்தின் ஒரு பிரிவான இனச்சிறப்புப் பெயரை  இணைத்தால் (பனை + மரம்) பனை மரம் என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை அமையும். இவ்வாறே சாரைப் பாம்பு, மல்லிகைப் பூ, பட்டுச் சேலை, சுரைக்காய்  போன்ற வழக்காற்றுச் சொற்கள் இருபெயரொட்டுப் பண்புத்தொகைகளாக இயல்கின்றன.

ஆகையால், வண்ணம், வடிவம், மணம் முதலிய பண்பைச் சுட்டும் பண்படையும். அந்தப் பண்பைக் கொண்டுள்ள பெயர்ச்சொல்லும் புணர்கையில் அமைவது பண்புத்தொகை ; இனப்பொதுப் பெயரோடு இனச்சிறப்புப் பெயரைப் புணர்த்தால் உருவாவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்று ஒப்பிட்டுத் தெளிவுறுத்தலாம். இதில் பொதுப்பெயரால் சிறப்புப் பெயரும் , சிறப்புப் பெயரால் பொதுப்பெயரும் சூழல் நோக்கி அறியப்படுவதுண்டு. சான்றாக, பல வகை மரங்களை விற்கும் கடையில் சென்று வேங்கை என்று கோரினாலே பொருள் புரியும். அதோடு, சாரைப் பாம்பு, பலாப் பழம் ஆகிய இருபெயரொட்டுப் பண்புத்தொகைப் புணர்ச்சியில் ஒற்று மிகுந்தும், நாக பாம்பு எனும் புணர்ச்சியில் இயல்பாகவும் மாம்பழம் எனும் புணர்ச்சியில் திரிந்தும் இயல்வதைச் சுட்டிக்காட்டலாம்.

மேலும் அடக்கும் சொல்லாக இனப்பொதுப் பெயரும் , அடங்கு சொல்லாக இனச்சிறப்புப் பெயரும் அமைகின்றன.  அதாவது,  இனப்பொதுப் பெயராக /அடக்கும் சொல்லாக    மரம் இயல  , அதன் வகைகளான மா, பனை, பலா ஆகியன அதற்குள் அடங்கு சொற்களாக  அமைகின்றன.   இதைப் பின்வரும் படத்தின் மூலம் விளக்கலாம்.

                                                 மரம் ( அடக்கு சொல்)

           மா மரம்                   பனை மரம்             பலா மரம்

 

 

நிறைவுரை :

  • பொருண்மையியல் அணுகுமுறை சார்ந்த இலக்கணக் கல்வி பிழையற்ற, நிறைவான மொழிப் பயன்பாட்டிற்கு உறுதுணையாகும்.
  • இலக்கண விதிகளை முறையாக அறியாமையாலும், பிழை நேரக்கூடாது என்னும் எச்சரிக்கை / விழுமிய உணர்வு இன்மையானும் ஒற்று மற்றும் தொடர்ப் பிழைகள் நேர்கின்றன; இது தவிர்க்கப்படவேண்டும்..
  • மொழிச் செயல்பாடுகளில் மரபு பின்பற்றப்பட்டுப் பொருள் புரிதிறன் பேணப்படவேண்டும்
  • இரண்டாம் வேற்றுமை உருபு, தொடரின் செயப்படுபொருளொடு மட்டும் பின்னொட்டாக ஒட்டும்: எழுவாயோடு ஒட்டாது. அதனால் இது செயப்படுபொருள் வேற்றுமை  என்று குறிக்கப்படுகின்றது.
  • பெயருக்கும் வேற்றுமை உருபுக்கும் இடையில் சாரியை இயல்வதுண்டு; சாரியைக்குச் சொற்பொருள் இல்லை.
  • பெயர்ச்சொல்லுடன் பண்பைச் சுட்டும் பண்படை இணைக்கப்படும்போது, இரண்டுக்குமிடையில் ஆகிய என்னும் இணைப்புச் சொல் தொக்கிநிற்பது பண்புத்தொகை ஆகும்.
  • தொடராக்கப் பொருண்மையில், ஓர் இனத்தின்  பொதுப் பெயரோடு அதன் வகையையும் புணர்க்கும்போது இருபெயரொட்டுப் பண்புத்தொகை உருவாகின்றது.
  • இருபெயரொட்டுப் பண்புத்தொகைப் புணர்ச்சியில் ஒற்று மிகுந்தும், இயல்பாகவும் திரிந்தும் இயலும்

DOWNLOAD PDF

REFERENCES:

  1. கொழந்தசாமி,ப. திருக்குறள் உரைகள் காட்டும் பொருள்நெறி, சென்னை: பாரதி புத்தகாலயம், 2002
  2. சுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியம்- தெளிவுரை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம், 1998
  3. கூகுள் இணையம். 4. கட்டுரையாளர் தன் துறைப் பேராசிரியர்களிடமும் பன்முறை நிகழ்த்திய ஆய்வாடல்.