ஒயிலாட்டம்
தமிழகத்தில் நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் ஆடப்படும் நடனமாகும். இசைக்கு ஏற்றவாறு கைகளில் கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு ஆடப்படும் நடனம்; ஒயிலாட்டம். ஆண்கள் மட்டுமே ஆடி வந்த இந்த நடனத்தைத் தற்போது பெண்களும் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்த “நடனம் இராமாயணம், மகாபாரதம் மற்றும் முருகனின் வரலாற்றைக் கூறும் விதமாக அமைக்கப்படும்”11என்பது மதுரை கிராம மக்களின் கருத்தாகும்.
ஒயிலாட்ட வரையறைகள்
ஒயில் என்றால் அழகு. இது அழகு நிறைந்த ஆடல். ஆண்களின் ஆடல் 12 முதல் 20 பேர் பங்கு கொள்வர். வாத்தியார் ஒருவர் நடுவில் நின்று ஆடலுக்கும் பாடலுக்கும் அழகு சேர்ப்பர். கிராமத்துக் கோயில் விழாக்களில் இது பெரும்பாலும் நடைபெறும். திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இன்றும் பெரிதும் வழக்கில் உள்ளது. இராமநாடகம், மகாபாரதம், முருகன், வள்ளி, காத்தவராயன், மதுரை வீரன் போன்றக் கதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆட்டக்காரர்கள், கண்ணைக் கவரும் வண்ணங்களில் சட்டைகள், காற்சட்டைகள், கழுத்துப் பட்டைகள், அணிந்திருப்பர். ஆபரணங்களும் பூட்டியிருப்பர். கைகளில் வண்ணங்களையுடைய கைக்குட்டை, கால்களில் சலங்கை, பாட்டின் வேகத்திற்கேற்ப கைகளை அசைத்து அசைத்து வேகமாக ஆடுவர். ஆண்மையின் அழகும் பூரிப்பும் தோன்ற ஆட்டம் அமையும். இதனை ‘ஒயில்கும்மி’ என்றும் சில இடங்களில் அழைப்பர்.“இவ் ஆட்டத்திற்கு இசைக்கருவிகளாக டோலக், ஜால்ரா போன்ற தாள வாத்தியக் கருவிகள் பயன்படும்”12
“தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்”13
என்ற நாட்டுப்புற இலக்கிய வரிகளின் வழி ஒயிலாட்டத்தின் சிறப்பை அறியமுடிகின்றது.
சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்டம்
இளைய நிலா ஒயிலாட்டக்கலைக்குழு எனும் இக்கிராமியக் கலைக்குழு சிவகாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது. இக்கலை தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும், பழக்க வழக்கத்தையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இவ்ஒயிலாட்டம்,“கரகாட்டம் போன்று 12 அடவு முறைகளைக் கொண்டது என இக்கிராமிய கலைக்குழு குறிப்பிடுகிறது”14
இந்திரனுக்கு வணக்கம்
சபைவணக்கம்
குழு வணக்கம்
எதிர் – எதிர் உழுதல்
விதை விதைத்தல்
நாற்றுநட்டல்
தண்ணீர் பாய்ச்சுதல்
களை எடுத்தல்
அறுவடை
தூற்றுதல்
வட்டக்கும்மி
இறைவழிபாடு
முதல் அடவு (இந்திரனுக்கு வணக்கம்)
ஒயிலாட்டம் மருதநில மக்களின் வழி தோன்றியதாக குறிப்பிடுகின்றனர். மருத நிலத்தில் வயலில் நெல் நட்டு அதைக் களையெடுத்துப் பின்பு அறுவடை செய்து அதில் விளைந்த நெல்மணிகளைக் கொண்டு விளைச்சலுக்கு காரணமான கிராம தேவதைகளான பெண் தெய்வங்களுக்கும் மருத நிலத் தலைவனான இந்திரனுக்கும் திருவிழா எடுத்து அவ்விழாவில் இக்கிராமியக் கலைகளை எடுத்துச் சொல்வதே இவ் ஒயிலாட்டமாகும். திறன் பொருட்டே இவ் ஒயிலாட்டத்தில் முதல் வணக்கமாக இந்திரன் வணக்கம் வணங்கப்படுகிறது.
இரண்டாம் அடவு (சபை வணக்கம்)
மருத நிலத்தில் பகல் முழுவதும் வேலை செய்துக் களைத்த மக்களுக்கு கண்களுக்கும், மனத்திற்கும் அமைதியை அளிக்க வாய்ப்பளித்த மக்களுக்கு செலுத்தும் வணக்கம், சபை வணக்கம் ஆகும்.
மூன்றாம் அடவு (குழு வணக்கம்)
குழு வணக்கம் எனும் இவ்வணக்கம் மக்களின் கண்ணுக்கு விருந்தும் மனத்திற்கு அமைதியையும் வழங்குவதற்கு நாம் ஒற்றுமையுடன் இக்கலை நிகழ்த்துவதன் பொருட்டு இக்குழு வணக்கம் வணங்கப்படுகிறது.
நான்காம் அடவு (எதிர் – எதிர் உழுதல் அடவு)
எதிர் – எதிர் உழுதல் அடவு என்பது தனக்கு எதிர் இருக்கும் அணியை நோக்கி அடவு நிகழ்த்திக்கொண்டு நடனத்தோடு எதிர் நோக்கிச் செல்லுதல் ஆகும்.
ஐந்தாம் அடவு (விதை விதைத்தல்)
விதை விதைத்தல் அடவு என்பது முதல் இருக்கும் அணி பின்னோக்கியும் பின்னால் இருக்கும் அணி முன்னோக்கியும் கைகளில் இருக்கும் துணியை வீசிக்கொண்டு மாறி மாறி முன்னோக்கியும், பின்னோக்கியும் ஆடிச் செல்வது விதை விதைத்தல் அடவு ஆகும்.
ஆறாம் அடவு (நாற்று நடல் அடவு)
நாற்று நடல் அடவு என்பது கைகளில் இருக்கும் துணியைக் குனிந்தவாறு மூன்று திசைக்கும் வீசி பின்பு நெற்றியில் வைத்து வீசிச் சென்று மறுபடியும் இவ்வாறு துணியைக் குனிந்தவாறு மூன்று திசைக்கும் வீசிக் கொண்டு செல்லுதல் நாற்று நடல் அடவு ஆகும்.
ஏழாம் அடவு (தண்ணீர் பாய்ச்சுதல்)
தண்ணீர் பாய்ச்சுதல் அடவு என்பது இரு அணியும் இணைந்து ஒருவரின் பின் ஒருவராக முன்னோக்கியும் பின்னோக்கியும் ஆடியவாறு வருதல் தண்ணீர் பாய்ச்சுதல் அடவு ஆகும்.
எட்டாம் அடவு (களை எடுத்தல் அடவு)
களை எடுத்தல் அடவு என்பது இரு அணியும் மூன்று மூன்று நபராகப் பிரிந்து முன்னோக்கியும் பின்னோக்கியும் எதிர் நோக்கியும் குனிந்து பின்பு நிமிர்ந்தவாறு கையில் இருக்கும் துணியை வீசிச் செல்லுதல் களை எடுத்தல் அடவு ஆகும்.
ஒன்பதாம் அடவு (அறுவடை அடவு)
அறுவடை அடவு என்பது இரு அணியினரும் குனிந்தவாறு எதிர் அணி இருக்கும் இடத்திற்குச் சென்று பின்பு திரும்பியவாறு தன் இடத்திற்கு மாறி மாறி ஆடுவது அறுவடை அடவு ஆகும்.
பத்தாம் அடவு (தூற்றுதல் அடவு)
தூற்றுதல் அடவு எனும் இவ்வடவு முன்நோக்கி நின்று தன் கால்களின் கீழ் கைகளைக் கொண்டு சென்று பின்பு தலைக்கு மேல் துணியை வீசுதல் தூற்றுதல் அடவு ஆகும்.
பதினொன்றாம் அடவு (வட்டக்கும்மி)
வட்டக்கும்மி எனும் இவ்அடவு இரு அணியினரும் வட்டமாக நின்று பின்பு உட்புறமாக நோக்கியும், வெளிப்புறமாக நோக்கியும் துணியை வீசிக் கொண்டு வட்டமாக ஆடுதல் வட்டக்கும்மி அடவு ஆகும்.
பன்னிரெண்டாம் அடவு (இறை வழிபாடு)
இறை வழிபாடு அடவு என்பது மருதநில வழி தோன்றிய கிராம தேவதைகளைக் குழுவாக வணக்கம் சொல்லி வணங்கும் இறை வழிபாடு அடவு ஆகும். இதுவே இக்கலையின் கடைசி அடவாக குறிப்பிடப்படுகின்றது.
சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்ட கலை (இளைய நிலா ஒயிலாட்டக் கலைக்குழு)
சிவகாசி வட்டாரத்தில் காணப்படும் இந்த இளைய நிலா ஒயிலாட்டக்கலைக்குழு திருவிழாக்களுக்கும், திருமண வைபவங்களுக்கும், பெரும்பாலும் பெண் பூப்பெய்தும் மாமன் சீர் கொண்டு வரும்போது அச்சீரின் முன்பு ஆடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்கலைகளுக்கு ஏற்றவாறு இசைக்கலைஞர்களும் தங்களின் இசையை அரங்கேற்றுகின்றனர். “இக்கலையை 15 நபர்கள் ஒன்றாக இணைந்து நிகழ்த்துகின்றனர்.”15 இவர்கள் முழுவதும் பட்டதாரிகளே. இக்கலையின்போது ஒன்று போல் ஆடை அணிந்து இக்கலை அடவுமுறைப்படி நிகழ்த்துகின்றனர். இவர் குறிப்பிடுவது பெரும்பாலும் சீர்வரிசைக்கே இக்கலையை அழைப்பதாகவும் அப்போது அவர்களுக்கு ஏற்ப கலையை மாற்றியும் ஆடுவர். மது அருந்திவிட்டு தகராறு செய்யும் நிலை தற்போது நிகழ்கிறது. இன்றைய நிலையில் மதிப்பு இழக்கும் வகையில் இக்கலை நடைபெறுகிறது.
முடிவுரை
நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளுள் ஒன்று ஒயிலாட்டக்கலை. இவ்ஒயிலாட்டக்கலை சிவகாசி வட்டாரத்தில் “இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு” என்று குழுவாக நிகழ்த்தப்பெற்று வருவதையும் அவ்வாறு நிகழ்த்துப்பொழுது ஏற்படும் பிரச்சனைக் குறித்தும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.