தற்காலச் சமூகத்தில் ஊடகங்கள் தவிர்க்க முடியாத அங்கமாக விளங்குகின்றன. செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கல்வி சார்ந்த தகவல்கள் எனப் பல்வேறு விதமான உள்ளடக்கங்களை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மகத்தானது. குறிப்பாக, தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்கள் போன்றவற்றின் பரவலான பயன்பாடு, மொழியின் பயன்பாட்டிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களில் பயன்படுத்தப்படும் மொழி, தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் மொழிப் பயன்பாட்டு முறைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்நிலையில், ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மாற்றங்கள் குறித்தும், அவை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் ஆராய்வது காலத்தின் தேவையாகும். இக்கட்டுரை, ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவை தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா, தமிழ் மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழி பயன்பாடு சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா, மற்றும் தொலைக்காட்சி மொழிக்கெனத் தனித்தன்மை உருவாகுமா ஆகிய கருதுகோள்களை மையப்படுத்தி ஆராய்கிறது.