சங்கஇலக்கியத்தில் பழந்தமிழர் பண்பாடு ( உணவு , உடை ,பழக்கவழக்கங்கள்)
பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”.1 சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” 2. மக்கள் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, தொழில், தெய்வம், மொழி, அரசியலமைப்பு, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக் கூறுகள் அமைகின்றன. சங்கத்தமிழரின் பண்பாட்டுக் கூறுகளுள் சிலவற்றை மையப்படுத்தியதாக இவ்வாய்வுரை அமைகின்றது .