Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

எயினர்கள்

You are here:
  1. Home
  2. Research Article
  3. எயினர்கள்

எயினர்கள்

முனைவர் மு.சுதா & இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3
sumuyogi@gmail.com
PDF
Print 🖨 PDF 📄 eBook 📱

எயினர்கள் வாழ்வியல்
சங்ககாலம்  இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.  காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை  காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் காணலாகும்  எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

எயினர்கள்
மணல் சார்ந்த நிலமான பாலையில் வசிக்கும் மாந்தர்கள் எயினர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.தொல்காப்பியர் அகத்திணைகள் பற்றிக் குறிப்பிடுகையில்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப“(அகத்.1)

என்றும் அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே“(அகத்.2)

என்றும் வரையறுக்கிறார். அதாவது கைக்கிளை முதலாப் பெருந்தணை ஈறாக முதன்மைபெறுகின்ற ஒழுக்கவகைகள் ஏழு என்றும் அவ்வேழில் குறிஞ்சி முல்லை பாலை  மருதம் நெய்தல் .  என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்று பாலைத்திணை நிலமாகக் கொள்ளப்படாத செய்தி உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” – சிலப்பதிகாரம்

எனச் சிலப்பதிகாரம் குறிஞ்சியும் முல்லையும் வளமை கெடும்போது அது பாலையெனப்படும் என்று சுட்டுகிறது. நடுவண் திணையாகச் சுட்டப்படும் வளமை குன்றிய அதாவது காடாகவுமில்லாமல், மலையாகவும் இல்லாமல் இரண்டும் கலந்து மயங்கி வெப்ப மிகுதியால் திரிந்த சுரமும் சுரம் சார்ந்த இடமுமாகக் கருதப்படும் இப்பாலை நிலத்தவர்களுக்கு உரிய பாலை நிலத்தலைவர் காளை, விடலை என அழைக்கப்பட்டுள்னர். பாலை நில மக்கள் மறவர் மற்றும் எயினர் எனப்பட்டுள்ளனர். கொற்றவையினைத் தெய்வமாகக் கொண்டதாகவும்  இந்நிலத்துக்குரிய மக்கள் கொள்ளையடித்தல் பிறரைத் துன்புறுத்தல் போன்ற செயல்களைச் செய்பவர்களாக நிலத்திற்கேற்ப வன்மையான தோற்றம் கொண்டவர்களாக இலக்கியங்கள் வழி அறியப்படுகின்றனர்.

எயினர்கள் வாழ்விடம் பாலையென்பதால் அந்நிலத்தில் வாழும் உயிரினங்களை வேட்டையாடும் இயல்பினையும் கொண்டவர்களாகவும் உள்ளனர். எயினர்கள் பாலைநிலத்திற்குரியவர்களென இளம்பூரணர் தொல்காப்பிய அகத்திணையியலில்
‘பாலைக்கு மக்கட்பெயர்எயினர் எயிற்றியர் என்பதால் மீளி விடலை என்ப’என்று கூறிச்செல்கின்றார். இலக்கியப்பதிவுகள் எயினர்களின் வாழ்வியலை வேட்டைத்n;தாழில் செய்யும் எயினர்கள் வறுமை நிலையில் வாழும் எயினர்கள் என இருவிதமாகப் பதிவு செய்கின்றன.

எயினர் வாழ்வியல்
பாலைத்திணையில் காணப்படும் மக்கள் எயினர் எயிற்றியர் என்பவர் ஆவர்.இவர்கள் சீறூர் எனப்பட்ட பகுதியில் வாழ்ந்தமையை

‘குவிந்த குரந்தை அம்குடிச் சீறூர்’

என அகநானூறு குறிக்கிறது. இவர்களின் தொழிலாக வேட்டையாடுதல் குறிக்கப்படுகின்றது

எயினர்கள் வறுமையின் காரணமாகப் புல்லரிசி சேகரித்த செய்தியையும் இலக்கியங்களில் காணமுடிகின்றது.

‘மான்தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிணவு ஒழியப் போகி நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்’

என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல் அடிகள் இதற்குச் சான்றாகும்.

இப்புல்லரிசி உணவை பிறருக்கும் அளித்து விருந்தோம்பிய பண்பாட்டுச் சிறப்பும் கொண்டு இவர்கள் வாழ்ந்துவந்துள்ளனர். இச்செய்தியையும் ஆற்றுப்படை நூல் விவரித்துச்செல்கின்றது.

குடநாட்டு மறவர் என்போர் வேட்டையாடிக் கொண்டுவந்த பன்றித் தசையுடன் நிணம்மிக்க வெண்சோற்றுக் கட்டியை வருவோர்க்கெல்லாம் குறைவு படாது வழங்குகின்றான்.அச்சோற்றுக்கட்டியை இரவலர் எனப்பட்டோர் பனையோலையால் செய்யப்பட்ட பனங்குழையில் பெற்று உண்ட மகிழ்வர்என்னும் செய்தி புறநானூற்றில் காணப்படுகிறது.

மேலும் உணவுக்குரியனவற்றைப் பிற்காலத்திற்குத்தேவை என்று சேமித்து வைக்கும் பழக்கமும் இவர்களிடம் இருந்தமைக்கும் சான்றுள்ளது.

இவர்கள் கூட்டமாக வாழ்ந்துள்ளனர். தாங்கள் வாழும் இடத்திற்கேற்ப வாழ்வை மேற்கொண்டனர் என்பததையும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

‘அருமிளை இருக்கையதுவே’ எனும் புறநானூற்று அடிகளும்
‘அருங்குழு மிளைக் குண்டு கிடங்கின்’ எனும் மதுரைக்காஞ்சி அடிகளும் இவற்றைச் சுட்டுகின்றன. மேலும்

வெப்பத்திற்கேற்ற குடிலில் வசித்தனர் எனசிறுபாணாற்றுப்படையும் அவர்களது குடிலின் மேற்புறம் முள்ளம்பன்றியின் முதுகுபோன்றிருந்தது என பெரும்பாணாற்றுப்படையும் அறிவிக்கின்றன.

‘நீள் அரை இலவத்து அலங்குசினை பயந்த
பூனை அம்பசுங்காய்ப் புடை விரித்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
யாற்று அறல் புரையும் வெரிநுடைக் கொடுமடல்
வேல்தலை அன்ன வைந்நுதி நெடுந்நகர்
ஈத்து இலை வேய்த எய்ம்புறக் குரம்பை’

என்பது அப்பாடலடியாகும்.

செய்யும் தொழிலுக்கேற்றவாறு காட்டுப்பூனை போன்ற வெருண்டபார்வை பெரியதலை புலால்நாற்றம் கமழும்;வாய் நயமில்லாச் சொற்கள் என இவர்கள் தோற்றம் பெற்றிருந்தமையை புறநானூறு குறிப்பிடுகின்றது. இச்செய்தியைச் சிலம்பிலும் காணமுடிகின்றது.

மேலும் சிலைமரத்தால் செய்த வில் மற்றும் அம்பை ஏந்தி சிவப்புநிற ஆடையும் அணிந்திருந்தனர்  என ஐங்குறுநூறு சுட்டுகின்றது.இது இவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ஆடை பற்றிய நாகரிகத்தைச் சுட்டுவனவாய் உள்ளன. இவர்கள் வேட்டைத்தொழிலை முதன்மையாகக் கொண்டவர்கள் என்பதனை சிலம்பு வேட்டுவவரியில் எடுத்துக்காட்டுகின்றது.

விருந்தோம்பலைப்பற்றிச்; சிறுபாணாற்றுப்படை
‘எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் ஆட்டின் அமைவரப் பெறுகுவீர்’

எனச் சிறப்பிக்கிறது.

வறுமையான நிலையிலும் செம்மையாக அவற்றிலும் பிறருக்கு உதவிவாழும் நல்வாழ்வினை மேற்கொண்ட எயினர்களை இங்கு காணமுடிகின்றது. அதே நேரத்தில் எயினர்கள் வழிப்பறி செய்து பொருள்களைக் கவர்ந்து கொள்வதோடல்லாமல் அவர்களைத் துன்புறுத்தும் இயல்புடையவர்கள் எனச் சிலம்பு குறிப்பிடுவதும் குறிக்கத்தக்கது. இவற்றிலிருந்து தொடக்கக்காலத்தில் எயினர்கள் வேட்டையினைத் தொழிலாகக் கொண்டும் செம்மையான வாழ்வினை மேற்கொண்டும் இருந்தனர் எனவும் தொடர்ந்த பிற்காலத்தில் பலரைத் துன்புறுத்தும்  கொலைகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் எண்ண இடமுண்டு.

எட்டுத்தொகைப்பாடல்களில் எயினர்களின் வளமான வாழ்வு பதிவு செய்யப்படவில்லை.ஆற்றுப்படைநூல்கள் அவர்களை உயர்வாகச் சுட்டுகின்றன. பின்வந்த சிலம்பு வேறுவகையாகச் சுட்டுகின்றன. இவற்றைக்கொண்டு நோக்குகையில் ஒரே குடியினரான எயினர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வாழ்நிலையைப் பெற்றுள்ளமையை அறிய முடிகின்றது.

தொடக்கக்காலத்தில் நாகரிகவளர்ச்சி பெறாத எயினர்கள் பின்னர் சிலகாலம் வறுமையுடனும் சிலகாலம் வறுமையுடன் கூடிய வாழ்வினைப் பெற்றிருந்திருக்கக்கூடும். தொகைப்பாடல்கள் எயினர்களின் ஆரம்பகால வாழ்வினைச் சுட்டுவதாய் உள்ளது. அதிகார வர்க்கத்தினரின் கீழே சிலர்களின் வாழ்வுகள் அமைந்துள்ளது. எயினர்களைக் கள்வர் என்கின்றனர். ஆனால் இலக்கியங்கள் ஆநிரை கவர்ந்தற்கானச் சான்றுகள் இல்லை.வேட்டைத்தொழில் புரிந்தார்கள் என்பதற்குச் சான்றுண்டு. எயினர்கள் ஓர் இனக்குழுவினராக வாழ்ந்துள்ளனர்.இவர்களுக்கென்று தலைமை சுட்டப்படவில்லை. ஏறக்குறைய கி.பி 12 நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்களாக வரலாற்றில் எண்ணப்படும் எயினர்கள் இனக்குழுவினராக வாழ்ந்து குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டுத் தங்கள் வாழ்வினை மேற்கொண்டுள்ளனர். தொடக்கக்காலத்தில் வேட்டைத்தொழிலும் வறுமையாக இருந்தாலும் செம்மையாக இருந்தோர் பிற்காலத்தில் வறுமையால் கொலை கொள்ளையென மாறியிருக்கலாம் என்பது இலக்கியங்கள் உணர்த்தும் உண்மையாகும், ஆனால் பண்டையகாலத்து வாழ்ந்த தமிழ்க்குடி எயினர்கள் என்பது மறுக்கஇயலா உண்மையாகும்.

சான்றெண்விளக்கம்

தொல்காப்பியம்,அகத்திணையியல்,நூ-1
மேலது., நூ-2
சிலப்பதிகாரம்,காடுகாண்காதை,64-66
தொல்காப்பியம்,இளம்பூரணர் உரை,அகத்திணையியல்,நூ-24
அகநானூறு,329
பெரும்பாணாற்றுப்படை,89-94
புறநானூறு,326
மதுரைக்காஞ்சி,64-65
பெரும்பாணாற்றுப்படை,83-88
சிறுபாணாற்றுப்படை,175-177

துணைநூற்பட்டியல்

இளம்பூரணர் உரை(1953), தொல்காப்பியம்,பொருளதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவச்சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,சென்னை

கந்தையாபிள்ளை..ந.சி,தமிழர் சரித்திரம்,வ.உ.சி. நூலகம்   கோவிந்தனார்.கா. (1996) பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை, எழிலகம்,  செய்யாறு.

சங்க இலக்கியங்கள்,(2004) நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை

சிதம்பரனார்.சாமி(2012) பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்,நாம் தமிழர் பதிப்பகம்,

புலியூர்கேசிகன் (2010) அகநானூறு, நித்திலக்கோவை மூலமும் உரையும், சாரதா பதிப்பகம்,சென்னை

வேங்கடசாமிநாட்டார்..ந.மு உரை,(2008) சிலப்பதிகாரம் மூலமும் உரையும், ராமையா பதிப்பகம், சென்னை

sumuyogi@gmail.com

* கட்டுரையாளர்கள்: முனைவர் மு.சுதா &  இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3

Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader