கற்றல் என்பது குழந்தைகளின் இயல்பான செயல். பள்ளி வகுப்பறையில் ஆசிரியரின் முக்கிய கடமை மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்துரைப்பதே ஆகும். அவ்வாறு கூறிய கருத்துக்களை மாணவர்கள் மனதில் எளிதாக இருத்தி வைக்க நாம் கையாளும் யுத்திகள் பல உள்ளன. குறிப்பாக மாணவர்களுக்கு ஒரு கருத்தை நேரடியாக சொல்லிவிடுவதால் புரிதல் கடினமாக இருக்கும்.

அறிஞர் அண்ணா சொன்ன தத்துவம் மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்கள் அறிந்தவற்றில் இருந்து தொடங்கு. அவர்களிடம் உள்ளவற்றை கொண்டு கட்டமை. இது மாணவர்களிடம் சுயகற்றல் உண்டாக்க நினைக்கும் ஆசிரியருக்கும் பொருந்தும்.

மனப்பாடமல்ல – புரிதல் தான் உண்மையான கற்றல். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் ஆசிரியரின் முக்கிய பணி மாணவர்கள் கற்றல் அனுபவத்தை எளிமையாக்குவதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மாணவர்களிடம் சொல்லி விட்டு அவர்களை படித்து வரச் சொல்லும் போது அவர்கள் முகத்தில் சலிப்பு ஏற்படுவதை பார்க்க முடிந்தது. இன்னும் சிலர் அந்த கருத்துக்களை மனதில் பதிய வைக்க போராடுவதையும், படித்ததை நினைவில் வைக்க முடியாமல் திணறுவதையும் நான் கண்கூடாக பார்த்தேன்.

அவ்வாறு கஷ்டபடும் மாணவர்களிடம் சுருக்க சொற்றொடர் அல்லது தொடக்க எழுத்து நினைவூட்டும் முறையினை (Acronyms) பயன்படுத்தி பார்த்ததில் மாணவர்களிடம் ஆர்வமும் மகிழ்ச்சியும் பாடக்கருத்தை எளிதாக நினைவு கூறுவதாகவும் இருந்ததை பார்த்தேன். உதாரணமாக நான்காம் வகுப்பு மாணவர்களிடம் சமூக அறிவியலில் ஆற்றங்கரை அரசுகள் பாடம் நடத்தும் போது சேரநாட்டின் தற்போதைய மாவட்டங்களை நினைவு கூற ‘சேகரு கேரளத்து கன்னி ஈரமான திண்ணைல நீர் கோலமிட்டாள்’ என சொல்லி சேர அரசு கேரளா, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகியவற்றின் முதல் எழுத்து வருமாறு சுருக்க சொற்றொடரை சொல்லிக் கொடுத்து நாளை வந்து கேட்பேன் என்று கூறி அனுப்பினேன். அடுத்து நாள் சேரநாட்டின் தற்போதைய பகுதிகள் என்று கூறியவுடன் போட்டி போட்டு கொண்டு சுருக்கத்தொடரை சொல்லிப்பார்த்து கடகடவென்று மகிழ்ச்சியோடு மாணவர்கள் கூறத்தொடங்கினர். இதைப் போலவே மற்ற பாடங்களுக்கும் பயன்படுத்திய போது மாணவர்கள் வெறும் கேட்பவராக மட்டும் இல்லாமல் பதில் சொல்லும், அனுபவிக்கும் கற்றலாளர்களாக மாறியதை பார்க்க முடிந்தது. கற்றல் ஒரு விளையாட்டு போல அவர்களுக்கு சுவாரஸ்யமாக மாறியதால் தாங்களும் அதுபோல சுருக்க சொற்றொடர்களை தாங்களாகவே உருவாக்கி கருத்துக்களை மறக்காமல் மனதில் பதியவைக்க நினைத்ததை பார்க்கையில் ஒரு ஆசிரியராக மாணவர்களிடம் கற்றுக்கொண்டு, அவர்களை நேசித்து, அவர்கள் அறிந்தவற்றிலிருந்து தொடங்கி அவர்களிடம் உள்ளவற்றை வைத்தே கட்டமைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.

பெ.பாலபாண்டியன்,

இடைநிலை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,

முத்துரெகுநாதபுரம்,

இராமநாதபுரம் மாவட்டம்.

கைபேசி 9087835959