இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், தான்சேன் போன்றவர்களும், மேல்நாட்டு இசை வல்லுனர்களான மொஸார்ட் (Wolfgang Amadeus Mozart), பீத்தோவான் (Ludwig van Beethoven), பாக் (Johann Sebastian Bach) போன்றோரும் தம் இசைத்திறனுக்காக இன்றும் புகழப்படுவதை நாம் மறந்து விடலாகாது. எனவே தான் நம் தமிழ்ச் சான்றோர்கள் இசைத்தமிழை உருவாக்கி மகிழ்ந்தனர். சோழர் காலத்தில் எல்லாக் கலைகளையும் போல் நுண் கலையான இசைக்கலையும் சிறப்பு பெற்றது. சோழநாட்டில் தமிழிசைக் கலை ஆலயங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், திருவிழாக் கூட்டங்கள், கூத்து மேடைகளில் வளர்க்கப்பட்டது. தமிழகத்தை எத்தனையோ அரசு மரபினர் ஆண்ட போதிலும் சோழரைப் போன்று தமிழிசை வளர்த்தவர்கள் ஒருவரும் இலர். அவர்கள் காலத்தில் இசைக்கலை தன் உச்ச நிலையை எட்டிற்று. எனவேதான் இக்காலத்தை தமிழிசையின் பொற்காலம் என்று போற்றுகின்றனர். சோழநாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் இசைக்கலையை நன்கு வளர்த்தனர். நுண்கலைப் புரவலர்களான சோழமன்னர்கள் சிறப்பு வாய்ந்த இசைக்கலையைப் போற்றியது வியப்பன்று. இசையால் தமிழ் வளர்ந்தது, தமிழால் இசை உயர்ந்தது.