பண்டைய காலத்தில் முடியாட்சியே நடைமுறையில் இருந்து வந்தது. மன்னன் மட்டுமே உயர்ந்தவனாகக் கருதப்பட்டான்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு” – (குறள் என்: 385)
என்ற திருக்குறளின்படி அரசர்கள் பொருட்களை உருவாக்கி, செல்வத்தை ஈட்டி, நாட்டின் வளத்தைப் பெருக்கி, மக்களைப் பாதுகாத்தனர். மக்களின் நலனுக்காக சிறந்த நெறிமுறைகளை வகுத்துத் திறமையான ஆட்சி நடத்தினார்கள். மக்களும் மன்னர்களைத் தெய்வமாகவே எண்ணி வாழ்ந்தார்கள்.
ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் பின்வருமாறு கூறுகிறது.
“நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ,
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” – புறம் – 187
காடு, மேடு, பள்ளம் போன்ற நிலத்தோற்றங்கள் ஒரு நாட்டில் இயல்பாகவே காணப்படுபவை. அவை, எப்படி மாறுபட்டு இருந்தாலும் அங்கு வாழும் மக்கள் நல்லவர்களாக இருந்கும்போது அது நல்ல நாடாகவே கருதப்படும் என்பது இப்பாடலின் கருத்தாகும்.
அரசர்களும் அறிவு, அன்பு, ஆற்றல் உடையவர்களாய் இருக்க வேண்டும். ஆறிவினால் நாட்டின் காவலுக்கு உரியவற்றை ஆராய்ந்து முறை தவறாது காப்பாற்ற வேண்டும்.
“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” – குறள் – 544.
குடிமக்களின் நலனை அரவணைத்து நல்லாட்சி செய்யும் தலைவனின் வழியைப் பின்பற்றியே உலக மக்கள் துணைநிற்பர் என்பது மேற்சொன்ன குறளின் பொருளாகும்.
அன்பினால் குடிமக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இல்லையென்று வருபவர்களுக்கு ஈதலும், தன்னுடைய ஆற்றலினால் பகையரசனை வீழ்த்துவதும், போரில் வெற்றி பெறுதலும் அரசனின் கடமைகளாக இலக்கியங்கள் கூறுவதைக் காணலாம்.
அதே சமயம் சில அரசுகள் சிறப்பான ஆட்சியைத் தரமுடியாத நிலையில் இருந்திருக்கின்றன. அரசர்களின் குணநலன்களைப் பார்க்கும்போதும், அரசுகள் ஒன்றுக்கொன்;று மாறுபட்ட இருந்திருக்கின்றன. இந்த வேறுபாடுகள்தான் ஒரு அரசு நல்லரசா? வல்லரசா? என்பதைக் காட்டும் கண்ணாடியாக விளங்கியிருக்கின்றன.