கலித்தொகை காட்டும் வாழ்வியற் போதனைகள்
மனித நல்வாழ்வுக்கான போதனைகளை கூறுவதில் தமிழ் இலக்கியங்கள் காத்திரமான பங்கு வகிக்கின்றன. தழிழ் இலக்கியங்களுள் ஒன்றானகவும் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் கலித்தொகையில் மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்வியற் போதனைகள் பல காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியதாகும்.
சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியை வகுத்துச் செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் நாம் அறியமுடிகிறது. “கல்வி வல்லார் கண்ட கலி” (கனகசபாபதி, தை.ஆ., 1937, கலித்தொகை மூலமும் விளக்கவுரையும் – பாலைக்கலி, ப.ஒi) என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையிலும் தமிழர்களின் வாழ்வியல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. பழந்தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் பெட்டகமாகத் திகழும் இந்நூலின்கண் கூறப்படும் வாழ்வியற் போதனைகளை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.