மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சமூக விடுதலையை நாடிய இராமலிங்கரின் சிந்தனைக் கருத்தியல்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையும் கிறிஸ்தவ மிஷனரிகளின் தீவிரச் செயல்பாடுகளும் ஒன்றுசேர்ந்து சைவ, வைணவ மதத்தின் சனாதன அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கின. இந்தக் காலக்கட்டத்தில் நுழைந்த நவீனக்கல்வி முறைகளால் நகரங்கள் முன்னேற்றமடைந்தாலும் சாதி, சமய அடிப்படைகளை மீறிய சிந்தனைக்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. மாறாகச் சமய அடிப்படையிலான சமூக முன்னேற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்த முடிந்தது. அதேநேரத்தில் காலனியத்தின் எதிர்வினைகள் காரணமாகச் சீர்த்திருத்த மரபுகள், இயக்கங்கள் போன்றவை பல புதிய போக்குகளையும் கொள்கைகளையும் தம்மிலிருந்து உருமாற்றிக் கொண்டன. அந்த வரிசையில் மரபைக் கட்டுடைத்து ஆன்மீக வழியில் சன்மார்க்கத்தையும் சமதர்மத்தையும் தேடியவராக வள்ளலார் காட்சியளிக்கிறார்.