வேளாண்மையின் வரலாறும் போக்கும்

வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது.