திருக்குறளில் செருக்கு– சொற்கருத்தாய்வு
இலக்கியங்கள் நிலைபேறுடைய மானிட மதிப்புகளையும் வாழ்வியல் விழுமியங்களையும் விண்டுரைத்து மானுட வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அறிவுறுத்தல், இன்புறுத்தல், மொழித்திறன் மிகுத்தல், பண்பாட்டுக் காப்பு. பொழுதுபோக்கு ஆகிய படைப்பு நோக்கங்களுள், தமிழ் இலக்கியங்களில் அறிவூட்டல் பண்பு மேலோங்கிக் கோலோச்சுதல் வெளிப்படை. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் சொல்லாட்சிச் செறிவும் திருக்குறளில் காணப்படுகின்றன. அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும்.