ஆய்விதழ்களின் இணையதளங்களில் “Open Access”, “CC BY 4.0”, “DOI” போன்ற சொற்கள் அடிக்கடி வருகின்றன. இவை என்ன, ஒரு கட்டுரையாளருக்கு இவற்றால் என்ன பயன் என்பதைக் களஞ்சியம் இதழின் நடைமுறையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இப்பக்கம் விளக்குகிறது.
திறந்த அணுகல் (Open Access) என்றால் என்ன?
வெளியான கட்டுரையை யார் வேண்டுமானாலும் கட்டணமோ கடவுச்சொல்லோ இன்றிப் படிக்கவும் பதிவிறக்கவும் முடிவது திறந்த அணுகல். களஞ்சியம் இதழின் எல்லாக் கட்டுரைகளும் வெளியான நாள் முதலே திறந்த அணுகலில் கிடைக்கின்றன. இதனால் உங்கள் ஆய்வு உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்களையும் ஆய்வாளர்களையும் சென்றடைகிறது. காண்க: திறந்த அணுகல் அறிக்கை.
CC BY 4.0 உரிமம் என்றால் என்ன?
கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன் 4.0 பன்னாட்டு உரிமம் (CC BY 4.0), கட்டுரையாளரையும் இதழையும் சுட்டிக்காட்டும் வரை, யாரும் கட்டுரையைப் பகிரவும், மொழிபெயர்க்கவும், மேற்கோள் காட்டவும் அனுமதிக்கிறது. பதிப்புரிமை கட்டுரையாளரிடமே இருக்கும்; இதழுக்கு வெளியிடும் உரிமை மட்டுமே வழங்கப்படுகிறது. காண்க: பதிப்புரிமையும் உரிமமும்.
DOI என்றால் என்ன?
DOI (Digital Object Identifier) என்பது ஒரு கட்டுரைக்கான நிரந்தர அடையாள எண். இணையதள முகவரி மாறினாலும், https://doi.org/ என்பதைத் தொடர்ந்து DOI எண்ணைத் தட்டச்சு செய்தால் கட்டுரை திறக்கும். களஞ்சியம் இதழ்க் கட்டுரைகளுக்கு Crossref நிறுவனம் வழியாக 10.63300 என்ற முன்னொட்டுடன் DOI வழங்கப்படுகிறது. மேற்கோள் காட்டும்போது DOI-ஐயும் சேர்த்துத் தாருங்கள்.
உங்கள் கட்டுரையை வேறு இடங்களிலும் பகிரலாமா?
ஆம். சமர்ப்பித்த வடிவம், ஏற்கப்பட்ட வடிவம், வெளியான வடிவம் – எதையும் பல்கலைக்கழகக் களஞ்சியம், Zenodo போன்ற தளங்கள் அல்லது உங்கள் சொந்த இணையதளத்தில் காலத்தடையின்றி (embargo இன்றி) பகிரலாம்; வெளியான கட்டுரையின் DOI இணைப்பைத் தர வேண்டும். காண்க: சுயக் காப்பகக் கொள்கை.
திறந்த அணுகலுக்குக் கட்டணம் ஏன்?
வாசகர்களிடம் கட்டணம் வசூலிக்காததால், இணைய வெளியீடு, DOI பதிவு, காப்பகப்படுத்துதல் ஆகியவற்றின் செலவில் ஒரு பகுதி கட்டுரை ஏற்கப்பட்ட பின் ₹1,000 வெளியீட்டுக் கட்டணமாகப் பெறப்படுகிறது. சமர்ப்பிப்புக் கட்டணம் இல்லை; மீதச் செலவுகளை வெளியிடும் கல்லூரி ஏற்கிறது. காண்க: கட்டண விவரம்.
