புறநானூற்றில் அரசியல் கோட்பாடுகளும் செங்கோன்மை நெறிகளும்

பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அகம், புற வாழ்க்கைப் பதிவுகளுள் புறநானூறு ஒப்பற்ற வரலாற்றுப் பேழையாகும். சங்க கால அரசியலமைப்பு, மன்னர்களின் கடமைகள், ஆட்சி நெறிமுறைகள், வரி வசூல் கோட்பாடுகள் மற்றும் அறமன்றங்களின் செயல்பாடுகள் குறித்துப் புறநானூற்றுப் பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன. இக்கட்டுரை, புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அரசியல் கோட்பாடுகளையும், “செங்கோன்மை” எனப்படும் நீதி தவறா ஆட்சிமுறையையும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவையும் விரிவாக ஆராய்கிறது. நவீன அரசியல் அறிவியல் சிந்தனைகளுக்கு இணையான கோட்பாடுகள் சங்க காலத்திலேயே நடைமுறையில் இருந்ததை இக்கட்டுரை நிறுவுகிறது.

தமிழ் மொழி வளர்ச்சியில் அருளாளர்களும் புலவர்களும்

தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சைவ சமய அருளாளர்களும் புலவர்களும் தம் படைப்புக்கள் வழி துணை நின்றமையைத் தக்கச் சான்றுகள் வழி ஆய்வுக் கட்டுரை கண்டு காட்டுகிறது.

ஆண்டாள் திருப்பாவை கூறும் உளவியல் கருத்துக்கள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சிந்தனைகள் – ஓர் ஆய்வு.

பக்தி இலக்கியத்தின் முத்துப் பெட்டகம் ஆண்டாள் அருளிய திருப்பாவை. ஆன்மீக வெளிப்பாட்டைக் கடந்து மனித மனத்தின் ஆழடுக்குகளைச் செம்மைப்படுத்தும் மாபெரும் உளவியல் களமே இத்திருப்பாவை.
திருப்பாவை முப்பது பாசுரங்களும் திருமாலின் பெருமைகளைப் பாடி, அவனுடைய திருவருளைப் பெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுவது. இப்பிரபந்தத்தின் உட்கருத்து, கண்ணனின் திருவருளைப் பெறுவதை, இறுதி இலட்சியமாகக் கொண்டு ஆண்டாளும், ஆயர்குல சிறுமியும் தங்களுக்கும், உலகத்தார்க்கும் எல்லாவித சிறப்பான நன்மைகள் கிடைக்க மேற்கொண்ட இந்நோன்பைக் குறிக்கும் ஓர் அற்புத இலக்கியம். இந்நூலைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு “யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்” (1-11) கூறுவதை பிரதிபலிக்கும் கீதை.
இச்சிறந்த பக்தி இலக்கியத்தில் உளவியல் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சிந்தனைகள் எங்கெங்கு, எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இவ்வாய்வின் நோக்கமாகும்.

சங்கப் பாடல்களில் எச்சரிக்கை நிமித்தங்கள்

பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்கள், அவர்களின் பண்பாடு, நம்பிக்கை மற்றும் இயற்கையுடனான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. மனிதன் தன் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைகளையும் தீமைகளையும் இயற்கையின் சில அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே உணர்ந்து கொண்டான். இவ்வறிகுறிகளே ‘நிமித்தங்கள்’ அல்லது சகுனங்கள் எனப்பட்டன. தொல்காப்பியக் காலம் தொட்டு சங்க காலம் வரை இந்நிமித்தங்கள் தமிழர்களின் அக, புற வாழ்க்கையில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் பயின்று வந்துள்ள நிமித்தங்கள் (நன்னிமித்தம்) பற்றிய பதிவுகளைத் தொகுத்துக் காண்பதையும், அவற்றின் பின்னணியில் உள்ள மக்களின் உளவியல் மற்றும் இயற்கை சார்ந்த அறிவை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சங்க கால மக்கள் விரிச்சி கேட்டல் (நற்சொல்), புள் (பறவைகளின் ஒலி/செய்கை), பல்லி கத்துதல், காகம் கரைதல், கனவுகள் மற்றும் கோள்களின் நிலை மாறுபடுதல் போன்ற பல்வேறு நிமித்தங்களை நம்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைவியின் ஆற்றாமைக்கு மருந்தாக நன்னிமித்தங்களும், இவை வெறும் மூடநம்பிக்கையாக மட்டுமில்லாமல், சங்க கால மக்களின் ஆழ்ந்த இயற்கையறிவையும், அவர்களின் மன உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்த உளவியல் தேவையையும் பிரதிபலிக்கின்றன என்பதை இவ்வாய்வுக் கட்டுரை நிறுவுகிறது.

தவ்வை: இலக்கியச் சொல்லாடலும் வளமைக் கருத்தாக்கங்களும்

தவ்வை என்ற சொல் தமிழில் அன்னையையும் மூத்த சகோதரியையும், இவ்விடத்தில் தமிழர்களின் ஆதித்தெய்வமும் வளமைத்தெய்வமுமாகிய மூத்ததேவியையும் குறிக்கின்றது. தற்காலத்தில் இத்தெய்வ வழிபாடு மறைந்துவரும் நிலையில் மூதேவி என்ற வசைச்சொல்லின் பயன்பாடு மக்களிடையே இருப்பதனைக் காண முடிகின்றது. சங்ககாலத்து இலக்கியங்கள் முதற்கொண்டு தற்கால இலக்கியம் வரை தவ்வையைக் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வரும் பல்வேறு பெயர்கள் காணக்கிடைக்கின்றன. அப்பெயர்களின் ஆய்வு இத்தெய்வம் வளமைக்கும் செழிப்புக்கும் உரிய தெய்வமாக இருந்தது என்ற கருத்தினை உணர வழிவகுக்கும். இதன் வழி மூதேவி என்ற சொல், வசைச்சொல் அல்ல வளமைச்சொல் என நிரூபிப்பது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.

தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்

சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியின் முதல் நூலான தொல்காப்பியம் மொழி, இலக்கிய இலக்கண வரையறைகளைத் தாண்டி, பழந்தமிழரின் வாழ்வியலையும் அறிவியல் சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் முதன்மை நூலாகும். உலக நாகரிகங்கள் வளரத் தொடங்கிய காலத்திலேயே தமிழர்கள் அறிவு உச்சத்தை எட்டியிருந்தனர் என்பதைத் தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் உரைகளின் அடிப்படையில் வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இக்கட்டுரையில், உலகத் தோற்றம் குறித்த தொல்காப்பியரின் ஐம்பூதக் கொள்கை மேலைநாட்டு அறிஞர்களின் பிரபஞ்சப் பரிணாமக் கொள்கைகளோடு ஒப்பிடப்படுகிறது. மேலும், உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தும் பிணி மற்றும் நோய்களைத் தானே கண்டறியும் ஆண், பெண் இருபால் “நோய் மருங்கறிஞர்கள்” பற்றியும், வேம்பு, கடுக்காய் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்திய “வாயுறை” மருத்துவ முறைகள் குறித்தும் ஆராயப்படுகிறது. அதிர்வும் மனத் தடுமாற்றமும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும் உடலியல் உண்மைகளையும், பெண்களின் கருவுறும் காலத்தைப் பன்னிரண்டு நாட்கள் (“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்”) எனத் துல்லியமாகக் கணக்கிட்ட சான்றோர்களின் கணிதவியல் கண்ணோட்டத்தையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
முடிவாக, இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு இலக்கியங்கள் அடித்தளம் அமைப்பதற்கு முன்பே, அவற்றுக்கெல்லாம் முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்கையின் இயல்பு மாற்றங்கள், மருத்துவம், கணக்கியல் போன்ற அறிவியல் கூறுகளை அழகுபடப் பதிவு செய்து பழந்தமிழரின் தத்துவார்த்த அறிவியல் அடித்தளமாக விளங்குவதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.

ஆற்றுப்படை நூல்களில் கலைஞர்கள்

சங்க இலக்கியம் இலக்கிய வளமும், இலக்கண வளமும் பெற்று தனித்தியங்கவல்ல சிறப்பினை உடையது. தமிழர்களின் மிக நீண்ட பண்பாட்டிற்கும் தனி சிறந்த நாகரிகத்திற்கும், பழம்பெரும் மரபுகளை புரிந்து கொள்வதற்கும் கலைகள் சான்றாக விளங்குகின்றது. சங்ககால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று இரண்டாக பகுத்துள்ளனர். இதில் பத்துப்பாட்டில் கலைகளும், கலைஞர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். பத்துப்பாட்டில் ஆடல், பாடல், இசைக் கலையில் சிறந்து விளங்கிய பாணர், விறலியர், கூத்தர், பொருநர் உள்ளிட்ட கலைப்படைப்பாளர்கள் எவ்வாறு கலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் அளவீடுகள்

பண்டைத் தமிழர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது. ஓர் இனத்தின் நாகரிகப் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு அவ்வினம் பயன்படுத்திய அறிவியல் மற்றும் கணிதக் குறியீடுகள் மிக முக்கியச் சான்றுகளாகும். அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம், வெறும் கற்பனை வளம் மிக்க இலக்கியச் சமூகம் மட்டுமல்லாமல் துல்லியமான அறிவியல் மற்றும் வணிகக் கோட்பாடுகளைக் கொண்டிருந்த ஓர் அறிவுச் சமூகம் என்பதைச் சங்க இலக்கியம் வழி அறியமுடிகிறது.
திணைசார் வாழ்க்கையையும், உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகத்தையும் அடித்தளமாகக் கொண்ட சங்க காலத்தில் பண்டமாற்று முறைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அளவீடுகள் இன்றியமையாத தேவையாக இருந்தன. பண்டமாற்று முறையில் பொருட்களின் அளவீட்டு முறைகள் பொருட்களின் நிலை மற்றும் அவற்றின் மதிப்புக் கருதியே அமைந்தது எனலாம். சங்க இலக்கியக் கோட்பாடுகளின் துணைகொண்டு பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளின் அமைப்பையும் அவற்றின் பின்னால் உள்ள சமூகப் பொருளாதார அறிவியல் பின்னணியையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பிற்கால அறஇலக்கியங்களில் குற்றவியல் சிந்தனைகளும் சமூக நீதி நிர்வாகமும்

மனிதன் வாழக்கூடிய சமுதாயத்தின் ஒழுங்கிற்கும் அமைதியான வாழ்வியல் சூழலுக்கும் அடிப்படையாக விளங்குபவை அறச் சிந்தனைகளே. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து, பிற்காலத்திலும் குறிப்பாக 14-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பல நீதி நூல்கள் தோன்றின. அவை சமூகத்தின் ஒழுங்கிற்கும் அமைதியான வாழ்வியலுக்கும் தேவையான நெறிமுறைகளை வழங்கின. பிற்கால அற இலக்கியங்களான நீதிநெறி விளக்கம், நன்னெறி, அறநெறிச்சாரம், மாயூரம் வேதநாயக பிள்ளையின் நீதிநூல் போன்றவை தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதோடு, சமூகம் என்ற அமைப்பில் குற்றத் தடுப்பு, குற்றங்களுக்கான தண்டனைக் கோட்பாடுகள், நீதி நிர்வாகம் ஆகியவற்றையும் நுட்பமாக விளக்குகின்றன. பிற்கால அறஇலக்கியங்களில் பொதிந்துள்ள குற்றவியல் சிந்தனைகளையும் சமூக நீதி நிர்வாக முறைகளையும் பன்முகப் பார்வையில் ஆய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகிறது..

மனித வாழ்வியலில் நாக வழிபாடு Naga Worship in Human life

புராணகாலம்தொட்டு இன்று வரையிலும் உலகில் பல்வேறு இன மக்களிடையே நாக வழிபாடானது இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு பெயர் வைத்து வெவ்வேறு முறையில் நாகவழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்பமண்டல பகுதியான தென்னிந்தியாவில் பல இடங்களில் நாகத்திற்கான கோவில்களும் அவற்றிற்கான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக குறிஞ்சி, முல்லை நிலங்களைப் பெறுமளவில் கொண்டிருக்கும் கொங்கு நாட்டில் நாகவழிபாடு பெற்றுள்ள முக்கியத்துவத்தினை இக்கட்டுரை முன்வைக்கிறது. சிறுதெய்வ வழிபாடு நிறைந்துள்ள கொங்குநாட்டில் பல இடங்களில் நாகத்;திற்கான கோவில்களும், நாக சிற்பங்களும் அமைந்து இன்றளவும் பெருவாரியான மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. கொங்குநாட்டில் நாகவழிபாடு பெற்றுள்ள முக்கியத்துவத்தினையும் உட்பொருளையும் ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது